ஹிமாச்சல் பிரதேசத்தில் 4 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 360 சாலைகள் மூடல்

சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் 4 நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 360 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.



ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையின் எதிரொலியாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட, ஏராளமான மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.


இந் நிலையில் நாளை முதல் 4 நாட்கள் ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாக சிம்லா வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது குறித்து வானிலை மையம் கூறி உள்ளதாவது;


மாநிலம் முழுவதும் லேசானது முதல் மிதமானது வரை மழை கொட்டி வருகிறது. நேற்றிரவு மட்டும் காங்கராவில் 68.4 மிமீ மழையும், முராரி தேவியில் 52.6 மிமீ மழையும் பதிவாகி உள்ளது. பாலம்பூரில் 52 மிமீ மழையும், சராஹனில் 25 மிமீ மழையும் பெய்துள்ளது.


இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.


ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை அடுத்து, ஆட்-சைன்ஜ் சாலை உள்பட மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 360 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. அவற்றில் 214 சாலைகள் மண்டி மாவட்டத்திலும், குல்லு மாவட்டத்தில் 92 சாலைகளும் அடைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement