பாகிஸ்தானை மண்டியிடச் செய்த புதிய இந்தியாவை உலகமே பார்த்தது; பிரதமர் மோடி பெருமிதம்

13

பெங்களூரூ: ஆப்பரேஷன் சிந்தூரின் போது, பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைத்த புதிய இந்தியாவை உலகமே கண்டு வியந்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.


பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பிறகு நான் முதல் முறையாக இன்று பெங்களூருக்கு வந்துள்ளேன். ஆப்பரேஷன் சிந்தூர், இந்திய படைகளின் வெற்றியைக் காட்டியது. எல்லைக்கு அப்பால் பல கிலோமீட்டர் தூரத்தில் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை நாங்கள் அழிக்கும் திறனையும், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக வந்த பாகிஸ்தானை சில மணி நேரத்தில் மண்டியிட வைக்கும் நமது ஆற்றலையும் உலகம் கண்டது. இந்த புதிய இந்தியாவின் முகத்தை முழு உலகமே பார்த்தது.


புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறியுள்ளது. உலக அளவில் தொழில்நுட்பத்துறை இந்தியாவின் கொடியை ஏற்றிய நகரம் இதுவாகும். பெங்களூரூவின் வெற்றிக்கு பின்னணியில் இங்குள்ள மக்களின் கடுமையான உழைப்பும் திறமையும்தான் காரணம்.


உலகில் 3வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். மறுசீரமைப்பு, செயல்திறன் மற்றும் மாற்றம் தான் இதற்கு முக்கியக் காரணம். இந்த வேகம் தெளிவான எண்ணம் மற்றும் நேர்மையான செயல்பாடுகளினால் வந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டில் நம் நாட்டில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்சேவை இருந்தது. தற்போது, 24 நகரங்களில் சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுகளில் மெட்ரோ ரயில்சேவை வழங்கப்படுகிறது.

அதேபோல, 2014க்கு முன், ரயில் பாதையில் சுமார் 20,000 கிலோ மீட்டர் மின்மயமாக்கப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் 40,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரயில் பாதைகள் மின்மயமாக்கியுள்ளோம். 2014 வரையில் இந்தியாவில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை 160க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நீர்வழி போக்குவரத்து வழித்தடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2014ல், வெறும் 3 தேசிய நீர்வழித்தடங்கள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. இப்போது இதன் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement