டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுங்க; தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் கோரிக்கை

42


புதுடில்லி: தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் வலியுறுத்தியுள்ளார்.


கடந்த 2024 லோக்சபா தேர்தல் முதற்கொண்டு, அதன் பின் நடந்த மாநில சட்டசபை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி, ஆவணங்களை வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இது குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், தனது குற்றச்சாட்டுகள் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளது.


இந்த நிலையில், தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்த வேண்டுமானால், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்; ஓட்டு திருட்டு என்பது 'ஒரு நபர், ஒரு ஓட்டு' என்ற அடிப்படை ஜனநாயகக் கொள்கையின் மீதான தாக்குதலாகும். தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டுமானால், போலி வாக்காளர்கள் இல்லாத வாக்காளர் பட்டியல் அவசியம். டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அதனை பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் ஆய்வு செய்யட்டும்.


votechori.in/ecdemand என்ற இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலமோ, 9650003420 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவோ, எங்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கலாம். இது ஜனநாயகத்திற்கு எதிரான போராட்டம், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement