உண்மையான பயனாளிகள்! பட்டா கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்

பல்லடம்; 'நாங்கள் தான் உண்மையான பயனாளிகள்; எங்களுக்கு பட்டா வழங்குவதுடன், தகுதியற்றவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்,' என்பதை வலியுறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி, பொதுமக்கள் பலர், பட்டா வழங்க வலியுறுத்தி, பல்லடம் தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். முன்னதாக, ஆவேசமடைந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சிக்க, போலீசார் தடுத்து நிறுத்தினர்.

'உங்களுடைய மனுக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, உறுதியாக பட்டா வழங்கப்படும்,' என, துணை தாசில்தார் பிரகாஷ் கூறினார். இதனால், பெண்கள் கலைந்து சென்றனர்.

இரண்டு நாள் முன், பட்டா வழங்க வலியுறுத்தி, இதே பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் பலர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட நிலையில், இன்று, நாங்கள்தான் உண்மையான பயனாளிகள் என்றும்; எங்களுக்குத்தான் பட்டா வழங்க வேண்டும் எனவும் கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், தாலுகா அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து, பெண்கள் கூறியதாவது:

வீடு, நிலம் இன்றி பல ஆண்டுகளாக பட்டா கேட்டு வருகிறோம். 'இன்று போய் நாளை வா' என, அதிகாரிகள் எங்களை அலைக்கழிக்கின்றனர். இதற்கிடையே, வசதி படைத்தவர்கள், வீடு உள்ளவர்கள் என பலருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாடகை வீட்டில் வசித்து மிகவும் சிரமப்பட்டு வரும் நிலையில், எங்களுக்கு பட்டா வழங்காமல் தகுதியில்லாதவர்களை தேர்வு செய்தது ஏன்? முன்னாள் வார்டு உறுப்பினர், அவரது உறவினர்கள் என்பதால் பலருக்கு பட்டா வழங்க முயற்சித்து வருகிறார்.

நாங்கள் தான் உண்மையான பயனாளிகள். உரிய ஆய்வு மேற்கொண்டு பட்டா வழங்குவதுடன், தகுதியற்றவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறப்பு முகாம் அவசியம்

'நாங்களே உண்மையான பயனாளிகள்,' என்று கூறி, இருதரப்பு பொதுமக்களும், கடந்த இரண்டு நாட்களாக பல்லடம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்மையிலேயே, வீடு, நிலம் இல்லாத பொதுமக்கள் பலர், மனு கொடுத்து பட்டா கிடைக்கும் என காத்திருக்கின்றனர். ஆனால், சில உள்ளூர் அரசியல்வாதிகளின் துாண்டுதலால், வசதி உள்ளவர்களுக்கும் பட்டா வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால், உண்மையான பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு, இருதரப்பு மக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது, சட்டம் ஒழுங்கை பாதிக்கச் செய்யும். எனவே, செம்மிபாளையத்தில், சிறப்பு முகாம் நடத்தி, உண்மையான பயனாளிகளை கண்டறிந்து, பட்டா கிடைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement