சாலை சீரமைக்கணும்

கு ழாய் பதிப்புக்கு தோண்டிய குழியை மூடி ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனரிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி, 55வது வார்டுக்கு உட்பட்ட பகுதி பட்டுக்கோட்டையார் நகர். இங்கு நுாற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இதில், 6 மற்றும் 7வது வீதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது.

இப்பணி முடித்து குழாய் பதிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகி விட்டது. ஆனால், இதுவரை குழாய் பதிப்புக்கு தோண்டிய குழி முறையாக மூடப்படவில்லை.

இதனால், இந்த இரண்டு வீதிகளிலும் ரோடும், சாக்கடை கால்வாயும் சேதமடைந்துள்ளது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தினமும் பெரும் அவதிக்கும், சிரமத்துக்கும் ஆளாகி வருகின்றனர்.

இதை சரி செய்து ரோடு மற்றும் சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது குறித்து, பட்டுக்கோட்டையார் நகர் கிளை இ.கம்யூ., செயலாளர் செந்தில்குமார் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் மற்றும் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்.

Advertisement