கனிமவள கொள்ளை தடுக்க வேண்டுகோள்

திருப்பூர்; கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்தாத பட்சத்தில், கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த தாராபுரம் பகுதி மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

தாராபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கனிமவள உதவி இயக்குனரிடம் நேற்று அளித்த மனு:

தாராபுரத்தில், நாதம்பாளையத்தை சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உரிமத்தை நகல் எடுத்து வைத்துக்கொண்டு, தாராபுரம், குண்டடம், மேட்டுக்கடை, பொட்டிக்கம்பாளையம், மூலனுார், அலங்கியம் பகுதிகளில், கிராவல் மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனர். இரவு பகல் பாராமல், வயல் மண் மற்றும் செம்மண் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிக ஆழத்திலிருந்து கிராவல், செம்மண் வெட்டி எடுக்கப்படுவதால், விவசாயத்துக்கு, வடிகாலில் நீர் வரத்து தடைபடுகிறது. கிராவல் மண் எடுக்கப்படுவதை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும்.

இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படாதபட்சத்தில், பொதுமக்கள் இணைந்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

Advertisement