காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் குறித்த நுால் வெளியீடு தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு துவக்கம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 91வது ஜெயந்தி விழாவையொட்டி, நுால் வெளியீடு மற்றும் தெய்வத்தமிழ் ஆய்வு மாநாடு துவக்க விழா காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நேற்று துவங்கியது.
சங்கரா கல்லுாரி தலைவர் சேது ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் நோக்கவுரை நிகழ்த்தினார். கல்லுாரி தமிழ் துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
தெய்வத்தமிழ் ஆய்வு மாநாட்டை டில்லி பல்கலை இந்திய மொழிகள் மற்றும் இலக்கியவியல் துறையின் முன்னாள் தலைவர் கோவிந்தசாமி ராஜகோபால் துவக்கி வைத்து பேசினார்.
விழாவில், புலவர் மகாதேவன் எழுதிய ‛இமாலய சாதனையாளர்' ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற நுாலை ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் பேராசிரியர் அருணை பாலறாவாயன் பெற்றுக் கொண்டார்.
கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, கோவில் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சியை கலவை ஆதீனம் சச்சிதானந்த சுவாமிகள், ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
விழாவில் ‛இமாலய சாதனையாளர்' நுால் ஆசிரியர் புலவர் வே.மகாதேவன், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலை முன்னாள் விரிவுரையாளர் எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி, கனடா தென்னாசிய நுண்கலை கற்கை மைய தமிழ் துறை தலைவர் பாலசுந்தரம் இளையதம்பி மற்றும் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் தொடர்ச்சியாக தொடங்கிய ஆய்வு மாநாட்டில் மலேசியா, இலங்கை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் பலர் பங்கேற்று பேசினர். கல்லுாரி தேசிய மாணவர் படை அலுவலர் ச.தெய்வசிகாமணி விழாவை தொகுத்து வழங்கினார்.
கலசாபிஷேகம்
மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவையொட்டி, ஏகாதச ருத்ர ஜெப ஹோமம் நடத்தப்பட்டு புனிதநீர் கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மஹா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.
இன்று ஆய்விருக்கை
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும் மாநாடு நிறைவு விழாவில், திருப்பதியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ளும் காஞ்சி மடாதிபதி சங்கர விஜேயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆன்லைன் மூலம் தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி, தெய்வத்தமிழ் ஆய்விருக்கையை துவக்கி வைத்து ஆசியுரை வழங்குகிறார்.
‛காஞ்சிபுரத்து கோவில்கள் 50' என்ற நுாலை ஆடிட்டர் குருமூர்த்தி வெளியிட்டு வாழ்த்துரை வழங்குகிறார். தெய்வத்தமிழ் ஆய்வு மாநாட்டு ஆய்வு கோவையை வெளியிட்டு சாஸ்தரா பல்கலை இயக்குனரும், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷய்யன் வாழ்த்துரை வழங்குகிறார். கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் சிறப்புரையாற்றுகிறார்.
மேலும்
-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
-
மேக்னைட் 'கருப்பு எடிஷன்'
-
டாடா 'ஹேரியர், சபாரி' ஆட்வெஞ்சர் ஆப்ரோடிங் செய்ய 'டீசல்' இன்ஜினில் வருகை
-
ஹோண்டா ஷைன் 100 டி.எக்ஸ்., ஸ்டைல், அம்சங்கள் 'அப்கிரேட்'
-
ராஜஸ்தானில் சோகம்; சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
-
டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பிய கிளப் தேர்தல்!