டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பிய கிளப் தேர்தல்!

புதுடில்லி: டில்லியில் உள்ள 'கான்ஸ்டிடியூஷன்' கிளப்பிற்கு நடந்த தேர்தலில், பாஜ எம்பி ராஜிவ் பிரதாப் ரூடி வெற்றி பெற்றார். இந்த தேர்தல் வெற்றி டில்லி வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பார்லிமென்டிற்கு அருகே உள்ளது, 'கான்ஸ்டிட்யூஷன்' கிளப். எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மட்டுமே இதில் உறுப்பினராக இருக்க முடியும். லோக்சபா சபாநாயகர் தான் இந்த கிளப்பின் அலுவல் சாராத தலைவர்.
கான்பிரன்ஸ் ஹால், பெரிய நவீன ரெஸ்ட்டாரன்ட், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பாட்மின்டன் மற்றும் 'பில்லியர்ட்ஸ்' விளையாட்டு தளங்கள் என, ஏகப்பட்ட வசதிகள் உள்ளன. இந்த கிளப்பில், 1,200 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தரப்பினருமே பாஜ கட்சியை சேர்ந்தவர்கள்.
முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய செயலாளருமான ராஜிவ் பிரதாப் ரூடி ஒரு தரப்பிலும், அவரை எதிர்த்து மற்றொரு முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் இன்னொரு தரப்பிலும் போட்டியிட்டனர்.
இரு தரப்பிலும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். ஐந்து முறை லோக்சபா எம்பி ஆன ராஜிவ் பிரதாப் ரூடி தன் செல்வாக்கை பயன்படுத்தி பிரபலங்களிடம் ஓட்டு சேகரித்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
எதிர்த்து போட்டியிட்ட சஞ்சீவ் பல்யான் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். இவருக்கு ஆதரவாக பிரபல பாஜ எம்பி நிஷிகாந்த் துபே ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேற்று மாலை நடந்த ரகசிய ஓட்டுப்பதிவு முடிவில் ஓட்டு எண்ணிக்கை விடிய விடிய நடந்தது. இதில் ரூடி தரப்பினர் வெற்றி பெற்றனர். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:
நான் 100க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். அதை 1000 வாக்காளர்களால் பெருக்கினால், எண்ணிக்கை 1 லட்சமாக உயரும். இது எனது குழுவின் வெற்றி. அனைவரும் தங்கள் கட்சியிலிருந்து எனக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்தனர்.
எனது குழுவில் பாஜ மட்டுமின்றி காங்கிரஸ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்பிக்கள் இருந்தனர். கடந்த இரண்டு தசாப்தங்களாக எனது முயற்சிகளின் பலனைப் பெற்றேன்.
இன்று ஆகஸ்ட் 13ம் தேதி, அதிகாலை 4 மணி 'கான்ஸ்டிடியூஷன்' கிளப் தேர்தல்கள் நிறைவு அடைந்துள்ளன. இந்த தேர்தலுக்கான மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கை 1295, பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கை 707. நான் 52 சதவீதத்துடன் 391 ஓட்டுக்கள் பெற்று, நான் தேர்தலில் வெற்றி பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜ எம்பி நிஷிகாந்த் துபே கூறியதாவது: வரலாற்றில் முதல்முறையாக 1,250 வாக்காளர்களில், அதிகமானோர் ஓட்டளித்துள்ளனர். பாஜ தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, மத்திய அமைச்சர்கள் ஓட்டளித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


