காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் மீண்டும் நடத்த முயற்சி; இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழுவில் ஒப்புதல்!

3

புதுடில்லி: 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்குழு அங்கீகரித்துள்ளது.


உலகளவில், விளையாட்டு போட்டிகளின் திருவிழாவாக ஒலிம்பிக் கருதப்படுகிறது. இப்போட்டிகளை 2036ம் ஆண்டு நடத்த விருப்பம் தெரிவித்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்தியா சார்பில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.இதற்கு அடுத்த விழாவாக, அதிக எண்ணிக்கையில் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது காமன்வெல்த் போட்டி ஆகும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டிகள், அடுத்து 2026ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23 முதல் ஆக., 2 வரை நடக்கிறது. காமன்வெல்த் அமைப்பில் உள்ள 74 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இந்த சூழலில், 2030ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுக்குழு அங்கீகரித்துள்ளது.
டில்லியில் நடந்த இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத், இந்த பிரமாண்ட தொடரை நடத்தப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.



இந்தப் தொடரை நடத்த கனடா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், திடீரெனப் போட்டியிலிருந்து விலகியது. இது இந்தியாவுக்கு காமன்வெல்த் தொடரை நடத்தும் வாய்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement