அமைச்சர்களுடன் தூய்மைப்பணியாளர்கள் நடத்திய பேச்சு தோல்வி

13


சென்னை: அமைச்சர்களுடன் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, இனிமேல் முதல்வருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனிடையே போராட்டம் நடக்கும் ரிப்பன் மாளிகையில் இருந்து கலைந்து செல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளனர்.


சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில், தனியார் நிறுவனத்தின் வாயிலாக, ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில், தற்காலிக துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு, அ.தி.மு.க., காங்., நா.த.க., கம்யூ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டு உள்ளது.


Tamil News
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இது தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து இனிமேல் முதல்வர் தலைமையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் மட்டுமே பங்கேற்போம் என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே, போராட்டம் நடக்கும் பகுதியில் இருந்து கலைந்து செல்லாவிட்டால் வழக்கு தொடரப்படும் என தூய்மைப் பணியாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement