2,800 நாய்களை கொன்றேன்: சிறை செல்ல தயார் என்கிறார் மஜத தலைவர்

4

பெங்களூரு: '' குழந்தைகளின் பாதுகாப்பு கருதி 2,800 நாய்களை கொன்றுள்ளேன். தேவைப்பட்டால் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன் ,'' என மத்திய அமைச்சர் எச்டி குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் சட்டசபையில் பேசியுள்ளார்.


மத சார்பற்ற ஜனதா தளத்தின் எம்எல்சியான எஸ்எல் போஜேகவுடா சட்டசபையில் பேசியதாவது: நாங்களும் விலங்குகள் மீது கவலை கொள்கிறோம். ஆனால், விலங்கின ஆர்வலர்கள் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளனர். நாய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இது குறித்து தினமும் டிவியிலும், நாளிதழ்களிலும் செய்தி வருகின்றன. சிக்மகளூருவில் உள்ளாட்சி அமைப்பின் தலைவராக இருந்த போது, இறைச்சியில் ஏதோ ஒன்றை கலந்து 2800 நாய்களுக்கு கொடுத்தோம். பிறகு அந்த நாய்களை தென்னை மரங்களுக்கு அடியில் புதைத்தோம். குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிறைக்கு செல்ல வேண்டுமானாலும் செல்ல தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தெரு நாய்களை அப்புறப்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ள நிலையில், கர்நாடகாவிலும் மாணவர்கள் சிலர் நாய்களால் பாதிக்கப்பட்டது குறித்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. அதன் மீதான விவாதத்தில் எம்எல்சியின் பேசும்போது இந்த தகவலை தெரிவித்தார்.

Advertisement