வியக்க வைத்த சுப்மன் கில் * யுவராஜ் பாராட்டு

புதுடில்லி: ''இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில்லின் திறமை வியக்க வைத்தது,'' என யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் 'ஆண்டர்சன்-சச்சின்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்திய கேப்டனாக சுப்மன் கில் 25, அசத்தினார். 5 டெஸ்டில், 754 ரன் (4 சதம், சராசரி 75.40, 'ஸ்டிரைக் ரேட்' 65.56) குவித்த இவர், சிறந்த வீரராக தேர்வானார். டெஸ்ட் தொடரை 2-2 என இந்தியா 'டிரா' செய்தது.
இதுகுறித்து இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் கூறியது:
அன்னிய மண்ணில் சுப்மன் கில் செயல்பாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. ஆனால், கேப்டனாக களமிறங்கிய இவர், நான்கு சதம் விளாசினார். தலைமை பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு, சிறப்பாக செயல்பட்டது, வியக்க வைத்தது.
தொடர் 'டிரா' ஆன போதும், இந்தியா வெற்றி பெற்ற உணர்வு தான் ஏற்படுகிறது. ஏனெனில் இளம் வீரர்களான இவர்கள், இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடி, தங்களை நிரூபிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.
கோலி, ரோகித் இல்லாத நிலையில், அவர்களது இடத்தை நிரப்ப வேண்டிய நெருக்கடி இருந்தது. ஆனால் சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் பொறுப்பாக செயல்பட்டனர்.
மான்செஸ்டர் போட்டியின் முடிவு தான், டெஸ்ட் தொடர் சமனில் முடிய முக்கிய காரணமாக இருந்தது. ஜடேஜா, வாஷிங்டன் இணைந்து சதம் விளாசி கைகொடுத்தனர். இதில் ஜடேஜா அனுபவம் வாய்ந்தவர். இளம் வீரரான வாஷிங்டன் இவருக்கு தோள் கொடுத்து, அணியை காப்பாற்ற உதவினார். இதுபோன்ற ஆட்டத்தை ஒருபோதும் நான் பார்த்தது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இடம் கிடைக்குமா
ஆசிய கோப்பை 'டி-20' தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் செப். 9-28ல் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி வரும் 20ல் அறிவிக்கப்பட உள்ளது. கேப்டன் சூர்யகுமார்-பயிற்சியாளர் காம்பிர் கூட்டணி, கடைசியாக பங்கேற்ற 15 'டி-20'ல் இந்தியா 13ல் வென்றது. துவக்கத்தில் சஞ்சு சாம்சன், 'டி-20' தரவரிசையில் 'நம்பர்-1' வீரர் அபிஷேக் சர்மா, அடுத்து திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் என 'டாப்-4' பேட்டிங் ஆர்டரில் எவ்வித மாற்றமும் இருக்காது. இதனால் சுப்மன் கில்லுக்கு இடம் கிடைக்காமல் போகலாம்.