'அவசர போலீஸ் 100'க்கு போன் செய்து அலைக்கழிப்பு

தஞ்சாவூர்:கும்பகோணத்தில், ஜவுளிக்கடை உரிமையாளரை கடைக்குள் வைத்து பூட்டி விட்டதாக, அவசர போலீஸ் 100க்கு போன் செய்து அலைக்கழித்ததால், போலீசார் கடை ஊழியர்களை எச்சரித்து சென்றனர்.

கும்பகோணத்தில், ஐந்து பேர் கொண்ட கும்பல், ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவரை உள்ளே வைத்து பூட்டி விட்டு, ஓடி விட்டதாக, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, கடை ஊழியர்கள் போலீஸ் அவசர உதவி எண், 100க்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் மேற்கு போலீசார், கடை ஊழியர்களிடம் விசாரித்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஜவுளி கடையில் மேனேஜராக பணியாற்றிய வெங்கடாசலம் என்பவர், ஐந்து பேருடன் வந்து, ஊழியர்களை வெளியேற்றி விட்டு, கடை உரிமையாளர் காதர் இப்ராஹிம் என்பவரை கடைக்குள் வைத்து பூட்டி விட்டுச் சென்றதாக, ஊழியர்கள் கூறினர்.

காதர் இப்ராஹிம் மொபைலுக்கு தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. உடனே, கடையின் பூட்டை உடைத்து, போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, ஹாயாக துாங்கிக் கொண்டிருந்த இப்ராஹிம், ''என்னப்பா பிரச்னை; எதுக்கு போலீஸ் வந்திருக்காங்க?,'' என, கேட்டார். டென்ஷனான போலீசார், 'என்ன நடந்துச்சுன்னு நீங்க சொல்லுங்க!' என்றனர்.

''எனக்கு ஒன்றும் தெரியாது. கடையின் மாடி அறையில் துாங்கி கொண்டிருந்தேன்; சத்தம் கேட்டு கீழே வந்தேன்,'' என்றார் இப்ராஹிம்.

நள்ளிரவு, 1:00 மணி வரை டென்ஷனாக்கிய ஜவுளிக்கடை ஊழியர்களையும், உரிமையாளரையும், போலீசார் எச்சரித்து சென்றனர்.

Advertisement