மகளை முன்னிறுத்தும் ராமதாஸ்: தீவிர அரசியலில் இறங்கிய மருமகள்

சென்னை: பா.ம.க.,வில் தன் மகள் ஸ்ரீ காந்திமதியை ராமதாஸ் முன்னிறுத்துவதால், பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார்.
அன்புமணி மத்திய அமைச்சரான பின், 'பசுமை தாயகம்' அமைப்பின் தலைவரான சவுமியா, அரசியல் பணிகளில் ஈடுபடாமல் இருந்தார். ஆனால், 2024 லோக்சபா தேர்தலில், தர்மபுரி தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்டு நேரடி அரசியலுக்கு வந்தார்.
அதன்பின், அன்புமணிக்கு உதவியாக கட்சி நிகழ்ச்சிகள், கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டார்.
மேடை ஏறிய காந்திமதி இந்நிலையில், பா.ம.க., வில் அப்பா -- மகன் மோதல் ஏழரை மாதங்களாக நீடித்து வருகிறது. மகனுடன் சமாதானம் ஏற்படாத நிலையில், தன் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அரசியலில் முன்னிறுத்தி வருகிறார்.
கடந்த ஜூலை 8ல், திண்டிவனத்தில் நடந்த பா.ம.க., செயற்குழுவில், ஸ்ரீ காந்திமதி மேடையேறினார். கடந்த 10ம் தேதி பூம்புகாரில் நடந்த மகளிர் மாநாட்டிலும் ஸ்ரீ காந்திமதி பேசினார்.
இப்படி மகளை, ராமதாஸ் அரசியலுக்கு கொண்டு வரும் நிலையில், அவரது மருமகளும், அன்புமணியின் மனைவியுமான சவுமியா, தீவிர அரசியலில் களமிறங்கிஉள்ளார்.
பூம்புகார் மகளிர் மாநாடு நடந்த அதே 10ம் தேதி முதல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில், சவுமியா தொடர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
கிருஷ்ணகிரி, தர்மபுரியில் கட்சி நிர்வாகிகள் இல்ல விழாக்கள், அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி திட்டங்கள், கட்சியினரின் நுால் வெளியீட்டு விழா என பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
அன்புமணியை சவுமியா இயக்குவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அரசியலில் சவுமியா தீவிரமாக களமிறங்கி இருக்கிறார்.
காங்., தலைவர் மகள் இது பற்றி அன்புமணி ஆதரவாளர்களிடம் பேசியபோது, 'தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகள் தான் சவுமியா. தற்போதைய காங்., - -எம்.பி., விஷ்ணு பிரசாத், அவரது சகோதரர். எனவே, அரசியல் சூழலிலேயே வளர்ந்தவர் சவுமியா.
'தன் கணவர் அன்புமணிக்காக தான் இதுவரை அவர் அமைதியாக இருந்தார். இப்போது, கணவருக்கு நெருக்கடி வந்துள்ளதால் துணிந்து களமிறங்கியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக சவுமியா போட்டியிடுவார்' என்றனர்.


மேலும்
-
சில மணி நேரத்தில் இனி 'செக்' பாஸ் ஆகும்! அக்., 4 முதல் புதிய நடைமுறை
-
சுதந்திர தின கொண்டாட்டத்தில் இந்திய 'கோ கோ' நட்சத்திரங்கள்... பிரதமர் மோடி உடன் பங்கேற்பு
-
தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் கைது
-
இந்திராவை எதிர்த்ததால் ஆட்சியை இழந்த கருணாநிதி
-
எல்லா திட்டங்களையும் ஒரே நாளில் முடிக்க முடியாது
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு எதிரான வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி