இனியும் தோல்வியை சந்திப்பார் பழனிசாமி: சாபம் விடுகிறார் பன்னீர்செல்வம்

1

தலைமை பண்புக்கான அறிகுறி துளியும் இல்லாத பழனிசாமியிடம், அ.தி.மு.க., சிக்குண்டு கிடப்பதால், தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அ.தி.மு.க., ஒன்றிணைய முயற்சி செய்வோரை அவமதிக்கும் பழனிசாமி, இனியும் தொடர் தோல்வியையே சந்திப்பார்' என, சாபம்விடும் தொனியில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், பழனிசாமி -- -பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு தொடருகிறது.

கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அணியில் இருந்து அ.தி.மு.க., விலகிய நிலையில், பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து பன்னீர்செல்வம் சுயேச்சையாக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

முடிந்த விஷயம் தற்போது, பா.ஜ., உடன் மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமைத்ததையடுத்து, பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்படுகிறார். தமிழகம் வந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், பழனிசாமி அளித்த பேட்டியில், 'பன்னீர்செல்வம் விவகாரம் முடிந்தபோன விஷயம்' என கூறினார். இதனால், பழனிசாமியின் 'இமேஜை' உடைக்கும் வகையில், பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

அறிவு, அனுபவம், மேலாண்மை, மனிதர்களை மதிக்கும் பண்பு சேர்ந்தது தான் தலைமை குணம். ஒரு சிறந்த தலைவர், அனைவர் துணையுடன், அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து, இயக்கத்தை திறம்பட நடத்துவார்.

மாறாக செயல்பட்டால், ஏளனத்திற்குரியவராக இருப்பார். ஆணவம், கடுங்கோபம், இழிவான நடத்தை கொண்டவர்கள், தலைமை பதவிக்கு அருகதையற்றவர்கள்.

தலைமை பண்புக்கான அறிகுறி துளியும் இல்லாத முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம், அ.தி.மு.க., சிக்குண்டு கிடப்பதால், அக்கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

உதாரணத்திற்கு, மதுரையில் பழனிசாமியின் காரில் ஏற முயன்ற முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, வேறு காரில் வருமாறு அறிவுறுத்தப்பட்டார். அது, செல்லுார் ராஜுவுக்கு அவமரியாதை.

அவமரியாதை லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி., செய்தியாளர் சந்திப்பில், தன் கருத்தை தெரிவிக்க முற்பட்டபோது, அவரை அனுமதிக்கவில்லை. இது தம்பிதுரைக்கு மிகப்பெரிய இழுக்கு.

இதுபோல் வெளிவராத சம்பவங்கள் ஏராளம். அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத் துவோர், அனைவரும் குறி வைத்து அவமரியாதை செய்யப்படுகின்றனர்.

செயலின் வலிமை, தன் வலிமை, பகைவனின் வலிமை, துணை செய்பவர்களின் வலிமை இவற்றை ஆராய்ந்து எந்தவொரு செயலையும் செய்ய வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

இதற்கு மாறாக எந்தச் செயலை செய்தாலும் அது படுதோல்வியில்தான் முடியும். இது பழனிசாமிக்கு பொருந்தும்.


இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் - .

Advertisement