ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு; 200 பேர் மாயம்


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலியாகினர். மேலும் 200 பேர் மாயம் ஆகி உள்ளனர்.



ஜம்மு - காஷ்மீரின், ஜம்முவில் உள்ள கிஷ்துவார் மாவட்டத்தில் நேற்று காலை பரவலாக மழை பெய்தது. கிஷ்துவாரில் இருந்து 90 கி.மீ., தொலைவில், 9,500 அடி உயரத்தில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் நேற்று பகல் 12:00 முதல் 1:00 மணி வரை மேக வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டியது.

அங்கிருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்கு செல்ல சோசிட்டி கிராமத்தில் குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மலைப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒருசில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் சிக்கினர்.



மலைப்பாதையில் இருந்த வீடுகள், கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சகதியாக வாரிச் சுருட்டிச் சென்ற வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 60 பேர் உயிரிழந்தனர்.வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 170 பேர் மீட்கப்பட்டனர். இதில், படுகாயம்அடைந்த 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சோசிட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 200 பேர் மாயமானதால், அவர்களை தேடும் பணி முடுக்கி விடப் பட்டுள்ளது.



மீட்பு நடவடிக்கையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மலையின் அடிப் பாகத்தில் இருந்து வீடுகள், கடைகள் போன்றவை இடிபாடுகளில் சிக்கி புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


@block_P@

விசாரித்தார் மோடி!

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு சம்பவத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா, கவர்னர் ஆகியோரிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக மோடி உறுதி அளித்தார்.block_P

Advertisement