ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்முதல்; நிறுத்தவில்லை என்கிறது இந்தியன் ஆயில்!

புதுடில்லி: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் பணிகள் ஏதும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை புறக்கணித்ததால், உலக சந்தை விலைகளுடன் ஒப்பிடும்போது ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெயை வழங்கி வந்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய இந்தியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதலை கணிசமாக அதிகரித்தது. 2022ம் ஆண்டு முதல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா அதிகப்படியாக இறக்குமதி செய்கிறது.
இந்த சூழலில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்தியாவுக்கு கூடுதல் வரியை அதிபர் டிரம்ப் விதித்தார். 25 சதவீதம் வரியும், மேலும் 25 சதவீதம் அபராத வரியும் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்துள்ளதால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்தி விட்டதாக வெளியான தகவலுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஏஎஸ் சாஹ்னி கூறியதாவது; ரஷ்ய கச்சா எண்ணெய் மீது எந்தத் தடைகளும் இல்லை. எனவே எண்ணெய் கொள்முதல் எதுவும் நிறுத்தப்படவில்லை.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைக்கவோ, அதிகரிக்கவோ, அரசிடம் இருந்து எந்த ஆணையும் எங்களுக்கு வரவில்லை. வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.
அதேபோல, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளிடம் இருந்தும் எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கவோ, குறைக்கவோ சொல்லவில்லை. சர்வதேச விலை நிலவரங்களைப் பொறுத்து, எண்ணெய் கொள்முதலை செய்து வருகிறோம், எனக் கூறினார்.
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கையின்படி, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய், நிறுவனத்தின் மொத்த கொள்முதலில் 34 சதவீதம் பங்கு வகித்துள்ளது. 'எந்த தடைகளும் இல்லாதவரை, இந்த விகிதத்தை 30 முதல் 35 சதவீதம் வரை இருக்க முயற்சிப்போம், என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



மேலும்
-
ஆஸியில் இந்திய சுதந்திர தினம் கொண்டாட்டம்: காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இடையூறு
-
உலகிற்கு அமைதியை கொண்டு வர பாடுபடும் இந்தியா: மோகன் பகவத்
-
வரதட்சணை புகார்களுக்கு ஆன்லைன் போர்ட்டல்: புதிதாய் யோசித்த கேரள அரசு
-
சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்கு; ரஷ்யா பாராட்டு
-
சுதந்திர தின விழாவை புறக்கணித்த ராகுல்; பாகிஸ்தான் விரும்பி என பாஜ விமர்சனம்
-
பிரதமரின் அறிவிப்பு மகிழ்ச்சி: மனம் திறந்து பாராட்டிய திருமா!