‛அபூர்வ ராகங்கள்' தந்த ‛அபூர்வ' மனிதர் ரஜினி: 50 ஆண்டுகளை கடந்தும் நிற்கும் அதிசய நாயகன்

9

இந்தியத் திரையுலகத்தில் தனது 75வது வயதிலும் சாதனை படைக்கும் ஒரு நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் மட்டும் அவர் படைத்த சாதனைகள் ஏராளம், ஏராளம். ‛சூப்பர் ஸ்டாரு யாரு...னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லு...' என்ற பாடலுக்கு ஏற்ப இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் நடிகர் ரஜினி நடித்த முதல்படமான அபூர்வ ராகங்கள் திரைக்கு வந்து இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதன்மூலம் திரையுலகில் 50வது ஆண்டை ரஜினி கடந்துள்ளார். அவரின் திரை பயணத்தை பற்றிய தொகுப்பு இதோ...

தொழிலாளி ரஜினி



பெங்களூருரில் 1950, டிச., 12ல் பிறந்த ரஜினியின் இயற்பெயர் சிவாஜிராவ் கெயிக்வாட். பால்ய பருவத்திலேயே தனது தாயை இழந்ததால் தனது அண்ணன், அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். இயற்கையிலேயே முரட்டுத்தனமும், பிடிவாத குணமும் உள்ள ரஜினிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளி , அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை தந்தது. ஆபிஸ் ப்யூனாக தனது முதல் பணியை ஆரம்பித்த ரஜினி, மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், தச்சுப் பட்டறைத் தொழிலாளியாகவும் பணிபுரிந்திருக்கின்றார். பின் கர்நாடக போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராகவும் பணி செய்துள்ளார்.

Latest Tamil News

சிவாஜிராவ், ரஜினியாக மாறியது



ரஜினிக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை அறிந்து இவருக்கு அரிதாரம் பூசி நடிகராக்கியது இவருடைய நண்பர் ராஜ் பகதூர். அவரின் நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் தமிழக அரசு திரைப்படக் கல்லூரிக்கு சென்று அங்கே நடிப்பை கற்கத் தொடங்கினார். இயக்குனர் கே பாலசந்தரின் பார்வை பட "அபூர்வ ராகங்கள்" படத்தில் நடித்தார். ரஜினி நடித்த முதல் படம் இதுவாகும். திரைப்படத்திற்காக இவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானா?", "நான் பைரவியின் புருஷன்" என்று தனது முதல் காட்சியிலேயே தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசி நடிக்கும் வாய்ப்பும் கிட்டியது ரஜினிக்கு. இத்திரைப்படத்திற்குப் பிறகுதான் சிவாஜிராவாக இருந்த இவர், ரஜினிகாந்த் என கே பாலசந்தரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

வில்லன்



தொடர்ந்து கே.பாலசந்தரின் அடுத்தடுத்த படங்களான "மூன்றுமுடிச்சு", ‛அவர்கள்' போன்ற படங்களில் பிரதான வில்லன் வேடமேற்று நடித்து மிகப் பிரபலமானார். வில்லனாக நடித்து வந்த ரஜினியால் குணச்சித்திர வேடத்திலும் ஜொலிக்க முடியும் என்று அவருக்குள் இருந்த அந்த குணச்சித்திர நடிகரை அடையாளம் காட்டியவர் எஸ்.பி.முத்துராமன். இவர் இயக்கத்தில் வெளிவந்த "புவனா ஒரு கேள்விக்குறி" திரைப்படத்தில் முழுக்க முழுக்க குணச்சித்திர வேடத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார்.

ஹீரோ டூ சூப்பர் ஸ்டார்



ரஜினி முழு ஹீரோவாக அவதாரம் எடுத்த முதல் திரைப்படம் "பைரவி". தயாரிப்பாளர் கலைஞானத்தால் அவர் ஹீரோவாக்கப்பட்டார். படத்தின் இயக்குநர் எம் பாஸ்கர். இதுவரை எம்ஜிஆரை வைத்து படமெடுக்காத தயாரிப்பாளர் கே.பாலாஜி, முக்தா சீனிவாசன் போன்றோரும் அதேபோல் சிவாஜியை வைத்து படமெடுக்காத தேவர் பிலிம்ஸ், சத்யா மூவீஸ் போன்றோரும் ரஜினியை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

Latest Tamil News

70களின் கடைசியிலும், 80களின் ஆரம்பத்திலும் பல வித்தியாசமான படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் அன்றைய ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான நடிகராக மாறினார். அந்த ஈர்ப்பு தான் அப்படியே மாறி மாறி அவரை சூப்பர் ஸ்டார் ஆக உருமாற்றியிருக்கிறது. வேறு யாரையும் அந்தப் படத்திற்கு நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை என்பது தான் உண்மை.

ரஜினி திரைக்கதை எழுதி தயாரித்த திரைப்படம் "வள்ளி". குறிப்பாக 1990களில் வெளிவந்த "தளபதி" "மன்னன்" "அண்ணாமலை" "உழைப்பாளி" "வீரா" "பாட்ஷா" "முத்து" "அருணாச்சலம்" மற்றும் "படையப்பா" என அனைத்து படங்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றவை. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 170க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார்.

காளி முதல் கூலி வரை



காலம் மாற மக்களின் ரசனை மாறும் என்பார்கள். ஆனால், ரஜினிகாந்தைப் பொறுத்தவரை அது கூலி வரையிலும் மாறாமலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதன் பின்னரும் தொடரத்தான் போகிறது. எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னை அப்படியே பொருத்திக் கொள்ளும் சாத்தியம் ரஜினியிடம் இருக்கிறது. அவரை ராகவேந்திரர் ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது, எந்திரன் ஆகவும் ஏற்றுக் கொள்ள முடிகிறது.

Latest Tamil News

சினிமாவிற்கு இருந்த இலக்கணத்தை உடைத்து இன்றும் பலர் தங்களை ஹீரோவாக நினைத்துக் கொண்டு திரையுலகத்திற்குள் நுழையவும், அப்படி நுழைந்தவர்களும் தங்களை சூப்பர் ஸ்டார்கள் ஆன நினைத்துக் கொள்வதற்கும் அப்போதே பாதை போட்டுத் தந்தவர் ரஜினி. இந்த 50 ஆண்டுகள் திரைப்பட வாழ்க்கையில் கே.பாலசந்தர் தொடங்கி இன்றைய இளம் இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் வரை பல முன்னணி இயக்குநர்களிடமும் நாயகனாக பணியாற்றியும், பணிபுரிந்து கொண்டும் இருக்கும் ஒரே அதிசய நாயகன் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.


@block_P@170க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி நடித்துள்ளார். இதில் உங்களுக்கு பிடித்த படம் எது, என்ன காரணம் என கீழே கமென்ட்டில் சொல்லுங்க...!block_P

Advertisement