டிரம்ப்-புடின் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது: ரஷ்யா திடீர் அறிவிப்பு

8

மாஸ்கோ: டிரம்ப்-புடின் சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவது இல்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது.



அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் இருவரும் அலாஸ்காவில் இன்று (ஆக.15) சந்தித்து பேச இருக்கின்றனர். உலக நாடுகள் மத்தியில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.


ரஷ்யா, உக்ரைன் நாடுகள் இடையேயான போர், அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து இந்த சந்திப்பின் போது முக்கிய பேச்சாக இருக்கும் என்பதே அதற்கு காரணம். 3 ஆண்டுகள் கடந்து நீடிக்கும் ரஷ்ய-உக்ரைன் போர் இன்றைய சந்திப்பின் மூலம் முற்று பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந் நிலையில், டிரம்ப் சந்திப்பின் போது எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக போவதில்லை என்று ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறி உள்ளதாவது;


இந்த பேச்சுவார்த்தை மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, இதன் முடிவுகள் எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாது.


இருநாடுகளின் தலைவர்களும் மிகவும் சிக்கலான பிரச்னைகள் பற்றி விவாதிக்க உள்ளனர். எனவே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகாது. இருநாடுகளின் புரிந்துணர்வுகள், பல்வேறு விவகாரங்களில் எதிர்கால ஒத்துழைப்பு போன்ற அம்சங்களில் ஒரு புரிந்து கொள்ளலை இந்த பேச்சுவார்த்தை ஏற்படுத்த செய்யும்.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement