உலக விளையாட்டு செய்திகள்

பிரிட்டன் வீரர் சாதனை

துருக்கியில் நடந்த சைக்கிள் பந்தயத்தின் 200 மீ., 'பிளையிங் ஸ்டார்ட்' பிரிவில் பிரிட்டன் வீரர் மாட் ரிச்சர்ட்சன் (8.941 வினாடி) உலக சாதனை படைத்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் 3 பதக்கம் வென்ற இவர், நெதர்லாந்தின் ஹாரி லாவ்ரிசென் (9.088 வினாடி) சாதனையை முறிடித்தார்.

வென்றது பிரேசில்

இந்தோனேஷியாவில் நடக்கும் பெண்களுக்கான (21 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் காலிறுதியில் பிரேசில் அணி 3-0 என அர்ஜென்டினாவை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் பல்கேரியா அணி 3-1 என, போலந்தை வென்றது.


ஜெயித்தது ஜெர்மனி

எகிப்தில் நடக்கும் ஆண்களுக்கான (19 வயது) உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் காலிறுதியில் ஜெர்மனி அணி 32-31 என, ஹங்கேரியை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின் அணி 31-29 என எகிப்தை தோற்கடித்தது.


பைனலில் நெதர்லாந்து
ஜெர்மனியில் நடக்கும் 'யூரோ' ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதியில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனி அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வென்றது.


எக்ஸ்டிராஸ்

* முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் 56, வரும் அக்டோபர்-நவம்பரில் நடக்கவுள்ள கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (கே.எஸ்.சி.ஏ.,) தேர்தலில் போட்டியிட உள்ளார். ஏற்கனவே இவர், துணை தலைவராக (2013-16) இருந்துள்ளார்.

* லாவோசில் நடந்த டபிள்யு.டி.டி., டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 3-0 (11-4, 11-6, 12-10) என ஜப்பானின் ரியோயிசி யோஷியமாவை வீழ்த்தினார்.

* இந்தோனேஷியாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 7-5, 3-6, 0-6 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் பிலிப் செகுலிக்கிடம் தோல்வியடைந்தார்.

* ஆசிய சாம்பியன்ஸ் லீக்-2 கால்பந்து தொடருக்கான (கிளப்) லீக் சுற்றில் கோவா அணி, ரொனால்டோவின் அல் நாசர் (சவுதி அரேபியா), அல்-ஜவ்ரா (ஈராக்), இஸ்டிக்லோல் (தஜிகிஸ்தான்) அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

* அபுதாபியில் நடந்த 'டி-10' தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்த இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர் சாலியா சமனுக்கு, 5 ஆண்டுகள் அனைத்து வித போட்டியில் பங்கேற்க ஐ.சி.சி., தடை விதித்தது.

Advertisement