தர்மஸ்தலாவில் மாயமான பெண்: எஸ்.ஐ.டி.,யில் சகோதரர்கள் புகார்

மங்களூரு: தர்மஸ்தலா சென்று மாயமான பெண்ணை கண்டுபிடித்துத் தரும்படி, அவரது சகோதரர்கள், எஸ்.ஐ.டி.,யில் புகார் செய்துள்ளனர்.

தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில் பெண்களை கொன்று புதைத்ததாக கூறப்படும் வழக்கு குறித்து, எஸ்.ஐ.டி., விசாரிக்கிறது. புகார்தாரர் அடையாளம் காட்டிய 20 இடங்களில் தோண்டியும் எலும்புக் கூடு கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சியான பா.ஜ., விமர்சித்து வருகிறது.

தர்மஸ்தலா வழக்கில் மிகப்பெரிய சதி நடந்து இருப்பதாக கூறும் துணை முதல்வர் சிவகுமார், சதிக்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பதையும் கூற வேண்டும் என, பா.ஜ., தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தர்மஸ்தலா வழக்கில் ஒன்றுமே இல்லை; வழக்கை முடித்துவிடலாம் என்ற மனநிலைக்கு, எஸ்.ஐ.டி., வரும்போதெல்லாம், யாராவது புதியவர்கள் வந்து, 'டுவிஸ்ட்' கொடுக்கின்றனர். 'உடல்கள் புதைக்கப்பட்டதை நாங்கள் பார்த்தோம்' என, தர்மஸ்தலாவின் புரந்தர் கவுடா, துகந்தர் கவுடா கூறியதால், அவர்களிடம் எஸ்.ஐ.டி., விசாரிக்கிறது.

இந்நிலையில் பெல்தங்கடியில் உள்ள எஸ்.ஐ.டி., அலுவலகத்திற்கு காவல முத்துார் கிராமத்தின் சகோதரர்கள் நிதின், நிதேஷ் நேற்று சென்றனர். எஸ்.ஐ.டி., அதிகாரிகளிடம் சென்று, 'எங்கள் சகோதரி ஹேமலதாவுக்கு 2012ம் ஆண்டு 17 வயது. பக்கத்து வீட்டு பெண்ணுடன், 2012ல் தர்மஸ்தலா சென்றார். அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. பக்கத்து வீட்டு பெண்ணிடம் கேட்டபோது, 'உங்கள் சகோதரி, என்னுடன் வரவில்லை' என்று கூறிவிட்டார். சகோதரி காணாமல் போனது பற்றி தர்மஸ்தலா, பெல்தங்கடி போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. காணாமல் போன எங்கள் சகோதரியை கண்டுபிடித்து தர வேண்டும்' என்று கூறினர்.

தாங்கள் கூறியதை புகாராக அளித்துள்ளனர்.

Advertisement