துணை ஜனாதிபதி தேர்தல்; என்டிஏ எம்பிக்களுடன் பிரதமர் மோடி 19ம் தேதி ஆலோசனை

புதுடில்லி: துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்பிக்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தங்கர் உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த மாதம் 21ம் தேதி அறிவித்தார். அவரது ராஜினாமாவும் உடனடியாக ஏற்கப்பட்டது. இதையடுத்து, புதிய துணை ஜனாதிபதிக்காக தேர்தல் செப்.,9ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்பு தாக்கல் கடந்த 7ம் தேதி தொடங்கியது. வரும் 21ம் தேதி கடைசி நாளாகும். மனுதாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. பாஜ கூட்டணி வேட்பாளரை எதிர்த்து இண்டி கூட்டணியும் வேட்பாளரை அறிவிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக பாஜ தலைவர்கள் ஏற்கனவே ஆலோசனை நடத்தினர். அப்போது, வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரத்தை பிரதமர் மோடிக்கும், பாஜ தலைவர் ஜேபி நட்டாவுக்கு வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜக பார்லிமென்ட் குழு கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் அனைத்து எம்பிக்களும் கட்டாயம் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்களுடன் வரும் 19ம் தேதி காலை 9.30 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.