ம.பி.யில் சோகம்; மினி பஸ்- லாரி மீது மோதியதில் இசைக்கலைஞர்கள் 4 பேர் பலி; 11 பேர் காயம்

1

போபால்: மத்திய பிரதேசத்தில் மினி பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியதில் இசைக்கலைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயம் அடைந்தனர்.


மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில், மினி பஸ் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணி மேற்கொண்டனர். குஜராத்தைச் சேர்ந்த இசைக் குழுவை சேர்ந்த 17 பேரை ஏற்றிச் சென்ற மினி பஸ், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் ஒரு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.


டிரைவர் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் இசைக் கலைஞர்கள் ஹார்திக் டேவ் (37), ராஜா தாக்கூர் (28), அங்கித் தாக்கூர் (17) மற்றும் ராஜேந்திர சோலங்கி (47) ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.


நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

Advertisement