பிரேவிஸ் குறித்து அஸ்வினால் கிளம்பிய சர்ச்சை... சென்னை அணி நிர்வாகம் கொடுத்த விளக்கம்

சென்னை: தென்னாப்ரிக்கா வீரர் பிரேவிஸை அணியில் சேர்த்தது தொடர்பாக அஸ்வின் வெளியிட்ட சர்ச்சை கருத்து குறித்து சென்னை அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் தவிர்க்க முடியாத அணியாக இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த சீசன் சென்னை அணிக்கு மோசமான சீசனாக அமைந்தது. மொத்தம் 14 போட்டிகளில் 4 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

கடந்த சீசனில் குர்ஜப்நீத் சிங்கிற்கு பதிலாக தென்னாப்ரிக்க வீரர் பிரேவிஸை சென்னை அணி, பிரீமியர் லீக் தொடரின் பாதியில் சேர்த்தது. இது குறித்து சென்னை அணியின் சீனியர் வீரர் அஸ்வின் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது, குர்ஜப்நீத் சிங் காயம் காரணமாக விலகிய நிலையில், அவரை எடுத்த ரூ.2.2 கோடி தொகைக்கே பிரேவிஸையும் எடுக்க வேண்டும் என்பது பிரீமியர் லீக் தொடரின் விதிமுறையாகும். ஆனால், பிரேவிஸ் கேட்ட தொகையை வழங்க சென்னை அணி நிர்வாகம் முன்வந்ததாக, அண்மையில் அஸ்வின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஐபிஎல் 2025ல் மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தபோது, அணி எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் விதிமுறைகள் படியே நடந்தது. எந்தத் தொகையும் கூடுதலாக கொடுக்கவில்லை என்று சென்னை அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement