மக்கள் செய்த பிழை: சீமான் பேட்டி

சென்னை: '' ஆட்சியாளரை குறை சொல்லி என்ன பயன்? ஆட்சியாளனை அந்த அதிகாரத்தில் அமர வைத்த மக்கள்தான் பொறுப்பு. என் மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
என்ன வேலை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: உண்மையிலேயே முதல்வரை சந்தித்தவர்கள் துப்புரவு பணியாளர்களா? தன்மானமிக்க ஒரு தொழிலாளி அவர்களுடன் நிற்பார்களா? முதலாளிகளுக்கு உழைக்கும் மக்களை கூலியாக தாரை வார்த்து கொடுத்துவிட்டார்கள். அதிமுகவுக்கு மாற்றுக் கொள்கை இல்லை. திமுகவுக்கும் மாற்றுக் கொள்கை இல்லை. அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களை பிரித்து கொடுத்தார்கள். மீதி இருக்கிறதை தற்போது கொடுக்கிறார்கள். ஆந்திராவின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி ராம்கிக்கு தமிழகத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பது வேண்டுதலா? அப்படி ஒன்றும் இல்லை
அந்த முதலாளிகளுக்கு கீழ் வேலை செய்யப்போகிறார்கள். அவர் தன் கைகாசை போட்டு சம்பளத்தை கொடுக்க போகிறாரா? அரசு கொடுக்கும் பணத்தில் கொடுப்பாரா? அரசு கொடுக்கும் காசை வாங்கி சம்பளம் கொடுப்பதற்கு நடுவில் ஒரு ஏஜென்ட் எதற்கு? ஒரு முகவர் எதற்கு? நீ என்ன வேலை பார்க்கிறாய்? உனக்கு என்ன வேலை ?
யார் பணத்தில்
அந்த வேலையை செய்ய முடியாது என்றால், மாநகராட்சி எதற்கு? அதற்கு தேர்தல் எதற்கு? மேயர் என பொறுப்பு எதற்கு? ஒவ்வொரு பகுதிக்கும் கவுன்சிலர் எதற்கு? அந்த காசு தண்டச் செலவு தானே? இதற்கு செலவு செய்யும் பணத்தை தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கொடுத்துவிடலாம்.5 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் இருக்கிறது. அதை வைத்து என்ன செய்யப்படுகிறது. மழைநீர் வடிந்து ஓடாது. கழிவு நீர் வெளிவராது. எந்த சாலையும் சீரமைக்கப்படாது. பிறகு எந்த வேலையை தான் மாநகராட்சி செய்யும்.
துப்புரவு பணி தனியாரிடம் கொடுக்கப்பட்டது. ராம்கி என்ற தனியார் நிறுவனத்திடம் வேலை செய்ய போகிறார்கள். வேலை செய்யப்போகிறவர்களுக்கு காலை உணவு எப்படி போடப்போகிறார்கள். யார் காசில் போடப் போகிறார்கள்.
காலை உணவு போடுகிறேன். மருத்துவ காப்பீடு தருகிறேன். செத்துப்போனால் 10 லட்சம் கொடுக்கிறேன் என்கிறார்கள். இதை யார் காசில் கொடுக்க போகிறார்கள். நான் வேலை செய்வது முதலாளிக்கு. இவர்கள் காலை உணவு போடுவார்களாம். எங்களை சோற்றுக்கு செத்த பயலாகவே கட்சிகள் வைத்து இருக்கின்றன. இந்தப் பணத்தை எதில் இருந்து கொடுக்க போகிறார்கள். இவ்வளவு செலவு செய்யும் அரசு, தொழிலாளர்கள் கேட்பதை கொடுத்துவிடுவது தானே
நிறைவேறவில்லை
தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் என வாக்குறுதி கொடுத்தனர். 4.6 ஆண்டுகளாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தினால் இந்த போராட்டம் தீவிரம் எடுக்கிறது. 4.6 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நீங்கள், இந்த வாக்குறுதியை மட்டும் எப்படி நிறைவேற்றுவீர்கள்.
மருத்துவம், கல்வி, போக்குவரத்து, மின்உற்பத்தி அனைத்தையும் தனியார் தான் சிறப்பாக செய்வான் என்றால், நீங்கள் என்ன செய்கிறீர்கள். அரசின் வேலை என்ன. நீங்கள் கையாலாகாதவன். தோற்றுப்போனவன். தகுதியற்றவன்.
கமிஷன் துறை
நாட்டின் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்க முடியவில்லை 207 அரசு பள்ளிகளை மூடுகிறார்கள். இதற்கு பிறப்பு விகிதம் குறைந்துவிட்டது என அமைச்சர் மகேஷ் காரணம் சொல்கிறார். சாராய கடையை திறந்துவைத்து குடி குடி என்றால் குழந்தை எப்படி பிறக்கும். பிறப்பு விகிதம் எப்படி கூடும். அரசு பள்ளிக்கு வரும் போது பிறப்பு விகிதம் குறைந்து விடுகிறது. தனியார் பள்ளிகளுக்கு சாரை சாரையாக படையெடுக்கிறார்களே அப்போது பிறப்பு விகிதம் கூடி விடுகிறதா?
தனியார் பள்ளிகளுக்கு பிறப்பு விகிதம் எப்படி கூடுகிறது. இதில் பள்ளிக்கல்விக்கு ஒரு துறை, உயர்கல்விக்கு ஒரு துணை, கால்நடைக்கு ஒரு துறை, பால்வளத்துக்கு ஒரு துறை. எதைப்பற்றியும் கவலைப்படாமல் கமிஷன் வாங்குவதற்கு ஒரு துறை. கவலைப்படாமல் மொத்த துறைக்கும் கமிஷன் துறை என பெயர் வைத்துவிடுவது நல்லது. படிக்க வரலைனு பள்ளிகூடத்தை மூடுகிறார்கள். குடிக்கவரவில்லை என்றால் டாஸ்மாக் கடையை மூடுகிறார்களா? நாட்டை எதை நோக்கி நகர்த்துகிறீர்கள். கேட்டால் நல்லாட்சி என்கிறீர்கள்.
கூலி காலி
15 நாளில் போராட்டத்தை அவசரம் அவசரமாக முடித்துவிட்டு காலையில் சோறு போடுகிறேன். ரூ.2 லட்சம் காப்பீடு தர்ரேன் செத்தால் ரூ.10 லட்சம் தர்ரேன் என பசப்பு அறிக்கை விட்டு முடித்து சோறாக்கி போட்டு நாடகம் போட்டு உள்ளனர். இதற்கு மேயர் தான் இயக்குநர். அவர் யாரிடமும் உதவியாளராக இருந்து கற்றுக் கொள்ள முடியாத காரணத்தினால் இயக்கம் சரியாக வரவில்லை. இயக்கம் மேற்பார்வை சேகர்பாபு சுத்தமாக தெரியவில்லை. படம் பிளாப் ஆகிவிட்டது. அந்த கூலியும் காலி. இந்த கூலியும் காலி . இரண்டு கூலியும் போய்விட்டது.
ஆட்சியாளனை குறை சொல்லி என்ன பயன். அந்த ஆட்சியாளனை அந்த அதிகாரத்தில் அமர வைத்த மக்கள்தான் பொறுப்பு. என் மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.











