பியூட்டி பார்லர்களில் சோதனை பெலகாவியில் விதிமீறல் அம்பலம்

பெலகாவி: பெலகாவி நகரின் பல்வே று இடங்களில் இருந்த பியூட்டி பார்லர்களில், சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அங்கு விதிமீறலான செயல்கள் நடப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.

பெலகாவியின் பெரும்பாலான பியூட்டி பார்லர்களில் மேக்கப், வாக்சிங் உட்பட மற்ற அழகுக்கலைகளை செய்வதற்கு பதிலாக, அனுமதியின்றி தலைமுடி அறுவை சிகிச்சை, சரும நோய்க்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சேவைகள் சட்டவிரோதமாக அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

முகத்தின் அழகை அதிகரிக்க ரசாயனம் பயன்படுத்துவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பலரும் பெலகாவி மாவட்ட கலெக்டர் முகமது ரோஷனுக்கு, எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். அனைத்து பார்லர்களையும் ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டார்.

அதன்படி, சுகாதார அதிகாரி ஈஸ்வர் தலைமையிலான அதிகாரிகள், நேற்று மதியம் பெலகாவி நகரின் பல்வேறு இடங்களில் உள்ள, 30 பியூட்டி பார்லர்களில், திடீர் சோதனை நடத்தினர்.

சோதனை நடத்தப்பட்ட 30 பியூட்டி பார்களில், 10 பார்லர்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. 20 பியூட்டி பார்லர்களுக்கு 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் முகத்தின் பொலிவை அதிகரிக்க, ரசாயனம் உட்பட அபாயமான மருந்துகளை பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. சிறப்பு வல்லுநர்கள் மட்டுமே, தலைமுடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால் பல பியூட்டி பார்களில் இது போன்ற அறுவை சிகிச்சைகளை, சர்வ சாதாரணமாக செய்யப்படுகிறது.

சருமத்தை அழகாக்க பீர் போன்ற பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெலகாவியில் பல பியூட்டி பார்லர்களில் இந்த விதிகளை பின்பற்றவில்லை. மக்களின் உயிருடன் விளையாடுவதை பார்த்து, அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிகாரிகளின் சோதனைக்கு பின்னரே, பார்லர்களின் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேக்கப், பேஸ் வாஷ், பிளீச்சிங் செய்ய ரசாயன பொருட்களை பயன்படுத்திய பியூட்டி பார்லர்கள் மீது, மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்திருப்பதை, பொது மக்கள் வரவேற்று உள்ளனர்.

Advertisement