சவுதியில் 26 ஆண்டுக்கு முன் நடந்த கொலை: தலைமைறைவு குற்றவாளி டில்லியில் கைது

புதுடில்லி: சவுதி அரேபியாவில் நடந்த கொலையில் 26 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியை டில்லியில் சிபிஐ கைது செய்தது.
சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 1999ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் கனரக மோட்டார் மெக்கானிக்காகவும், பாதுகாவலராகவும் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ப
முகமது தில்ஷாத் 52, மீது ரியாத்தில் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
சவுதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில் சிபிஐ ஏப்ரல் 2022ல் தில்ஷாத் மீது வழக்குப் பதிவு செய்தது, மேலும் அவர் மீது ஒரு லுக் அவுட் சுற்றறிக்கை (LOC) வெளியிடப்பட்டது.
விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் ஏமாற்று வழிகளில் பெறப்பட்ட வேறு அடையாளத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தார்.
ஆகஸ்ட் 11ம் தேதி மெதினாவிலிருந்து புதிய அடையாளம் மற்றும் பாஸ்போர்ட்டில் திரும்பி வந்தபோது டில்லி விமான நிலையத்தில் தில்ஷாத் கைது செய்யப்பட்டார்.ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார், மேலும் விரிவான விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.