ராமதாஸ் - அன்புமணி தைலாபுரத்தில் திடீர் சந்திப்பு

15

சென்னை: தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று குடும்பத்துடன் சென்ற பா.ம.க., தலைவர் அன்புமணி, தந்தை ராமதாசுடன் இணைந்து, தாய் சரஸ்வதியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

பா.ம.க.,வில் அப்பா, மகன் இடையிலான மோதல் கடந்த ஏழரை மாதங்களாக நீடித்து வருகிறது. மகன் அன்புமணி மீது, ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

'தாயின் மீது தண்ணீர் பாட்டிலை அன்புமணி வீசினார்' என்று, ராமதாஸ் சுமத்திய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பானது.

சமீபத்தில் ராமதாஸ் தன் 60வது திருமண நாளை கொண்டாடினார். அன்புமணி சென்று வாழ்த்தவில்லை. தாய் சரஸ்வதிக்கு மட்டும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக, ராமதாஸ் தன் வருத்தத்தை பதிவிட்டார்.

இந்நிலையில், ராமதாசின் மனைவி சரஸ்வதி நேற்று தன் பிறந்த நாளை கொண்டாடினார். அதை முன்னிட்டு மனைவி சவுமியா, மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகளுடன் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்ற அன்புமணி, கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது, ராமதாசும் உடன் இருந்தார்.

கடந்த மே 11ம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு பின், ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக சந்தித்துள்ளனர். இது, பா.ம.க.,வினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement