தி.மலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த மக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலையில், நேற்று சுதந்திர தின விடுமுறை, இன்று சனி, நாளை ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் என்பதால், திருவண்ணாமலையில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

தற்போது மாட வீதியில் சாலை அமைப்பதாலும், நகரில் முக்கிய பிரதான சாலைகளில் கழிவு நீர் கால்வாய் கட்டும் பணி நடப்பதாலும், உள்ளூர் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், வெளியூர்களிலிருந்து வந்த வாகன ஓட்டிகளும், எங்கு பார்க்கிங் செய்வது என தெரியாமல் வாகனங்களில் நகரில் உள்ள வீதிகளில் சுற்றி சுற்றி வந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர்.

மேலும், திருவண்ணாமலையிலிருந்து சென்னை, வி ழுப்புரம், பெங்களூரு செல்லும் பைபாஸ் சாலை பகுதிகளில் ஆயிரக்கணக்கான கார், டூரிஸ்ட் பஸ், வேன் போன்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், இந்த வழியாக சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன.

திரு வண்ணாமலை பைபாஸ் சாலைகளை கடந்து பிரதான சாலைகளில், 5 நிமிடங்களில் கடக்க வேண்டிய துாரத்தை, ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டியிருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement