வலிகளை புரிந்து கொள்கிறேன்; மேக வெடிப்பு பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர் உமர் வருத்தம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா நேரில் பார்வையிட்டார். அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம், என்றார்.

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சிசோட்டி கிராமத்தில், நேற்று முன்தினம் மதியம் திடீர் மேகவெடிப்பால் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய கனமழையால், சிசோட்டியை ஒட்டிய மலைப்பாதையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.


சிசோட்டி கிராமம் வழியாக இமயமலையை ஒட்டியுள்ள மச்சைல் மாதா கோவிலுக்கு பாத யாத்திரையாக செல்ல திரண்டிருந்த ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.



இதில், 48 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 21 பேரின் உடல்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இதுவரை 160க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். சிசோட்டி கிராமம் முதல் வெள்ளம் பாதித்த பகுதி வரை மாயமான 500க்கும் மேற் பட்டோரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.


இந்த சூழலில், மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட சிசோட்டி கிராமத்தில் முதல்வர் உமர் அப்துல்லா நேரில் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சவால்களை எதிர்கொள்ளும் மீட்பு நடவடிக்கைகள், இடிபாடுகளை அகற்றுவதில் கடினமான சூழல் நிலவுகிறது, என்றார்.

Advertisement