இந்தியா மீதான டிரம்பின் வரிகள் முட்டாள்தனம்: வெளுத்து வாங்கிய அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ்

வாஷிங்டன்: "அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி முடிவுகள் அமெரிக்காவிற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிப்பதாக இருக்கலாம். இந்தியா மீதான டிரம்பின் வரிகள் முட்டாள்தனம்" என பிரபல பொருளாதார நிபுணரும், கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான ஜெப்ரி சாக்ஸ் தெரிவித்தார்.
இந்திய பொருட்கள் மீதான டிரம்பின் 50% வரிவிதிப்பு தொடர்பாக, ஜெப்ரி சாக்ஸ் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது முட்டாள்தனம். அது எந்த நோக்கத்திற்கும் உதவாது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி முடிவுகள் அமெரிக்காவிற்கு நன்மையை விட அதிக தீங்கு விளைவிப்பதாக இருக்கலாம்.
வரிகள் தவறானவை
அமெரிக்க பொருளாதாரத்திற்கு அழிவுகரமானதாக இருப்பதால் வரிகள் தவறானவை. இது சர்வதேச சட்டத்தை மீறுகிறது. இது அமெரிக்காவில் நமது அரசியல் அமைப்பின் சீர்குலைவு. நமக்கு ஒரு அரசியலமைப்பு உள்ளது. டிரம்பின் முழு வரி விதிப்பும் அரசியலமைப்பிற்கு விரோதமானது.
தோல்வி அடையும்
பொருளாதார ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும், டிரம்பின் வரி விதிப்பு கொள்கைகள் தோல்வி அடையும். முதலில், அதிபர் டிரம்ப் மாயையில் இருக்கிறார். அவர் கோரிக்கைகளை வைக்க முடியும் என்றும் மற்றவர்கள் அதற்கு இணங்குவார்கள் என்றும் அவர் நினைக்கிறார். அவரைப் பொறுத்தவரை, அமெரிக்கா நீண்ட காலமாக ஆதிக்க சக்தியைப் பயன்படுத்தி வருகிறது. இப்போது அது உலகின் மற்ற எல்லா பகுதிகளிலும் முதலாளித்துவம் செய்ய முடியும் என நினைக்கிறார்.
முடிவுக்கு வரணும்
உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு வர வேண்டும். ஆனால் டிரம்ப் அரசியல் ரீதியாக போதுமான புத்திசாலியாகவோ அல்லது துணிச்சலானவராகவோ இல்லை. அதனால் அவர் இந்தியாவை வீழ்த்த முயற்சிக்கிறார்.
பொருளாதாரம்subtitle
அமெரிக்காவின் உண்மையான விரோதம் ரஷ்யா, சீனா, இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா மீது உள்ளது. அவை (வரி விதிப்பு) அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்தாது. அவை அமெரிக்காவை புவிசார் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தும். அவை பிரிக்ஸ் மற்றும் பிற அமைப்புகளை வலுப்படுத்தும். இவ்வாறு ஜெப்ரி சாக்ஸ் கூறினார்.
