உலக கோப்பை: அமெரிக்கா தகுதி

துபாய்: உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு (19 வயது) அமெரிக்க அணி தகுதி பெற்றது.

ஜிம்பாப்வே, நமீபியாவில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக கோப்பை கிரிக்கெட் 16வது சீசன் (2026) நடக்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் ஜிம்பாப்வே, கடந்த சீசனில் 'டாப்-10' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 11 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. ஆப்கானிஸ்தான் (ஆசியா), ஜப்பான் (கிழக்கு ஆசியா-பசிபிக்), ஸ்காட்லாந்து (ஐரோப்பா), தான்சானியா (ஆப்ரிக்கா) அணிகள் தகுதிச் சுற்றின் மூலம் தேர்வாகின.
அமெரிக்க அணிகளுக்கான தகுதிச் சுற்று, அமெரிக்காவில் நடந்தது. இதில் அமெரிக்கா, கனடா, பெர்முடா, அர்ஜென்டினா என 4 அணிகள் 'டபுள் ரவுண்டு ராபின்' முறையில் விளையாடின. விக்கெட் கீப்பர் பேட்டர் அர்ஜுன் மகேஷ் தலைமையிலான அமெரிக்க அணி, இதுவரை விளையாடிய 5 போட்டியிலும் வெற்றி பெற்று, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. இதன்மூலம் உலக கோப்பை தொடருக்கு மூன்றாவது முறையாக (2006, 2010, 2026) தகுதி பெற்றது.

Advertisement