பட்டியலின மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்; திருமா மீது எல்.முருகன் பாய்ச்சல்

6


சென்னை: என்னை பொறுத்தவரை திருமாவளவன் பட்டியலின மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து கொண்டு இருக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: மாறி மாறி பேசி வருவது திருமாவளவன் நிலையாக இல்லை என்பதை காட்டுகிறது. தூய்மைப் பணியாளர்களை, தூய்மைப் பணியாளர்களாகவே வைத்திருக்காமல், அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரை திருமாவளவன் பட்டியலின மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து கொண்டு இருக்கிறார்.


அக்கறை இல்லை




பட்டியலின மக்கள் நலனில் திருமாவளவனுக்கு சிறிதும் அக்கறை இல்லை. பட்டியலின மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், கடந்த 5 ஆண்டுகளில் அவர் (திருமாவளவன்) எந்த இடத்திலும் வாயே திறக்கவில்லை. பட்டியலின மக்கள் எப்படி போனால் எனக்கு என்ன என்பது அவரது எண்ணமாக இருக்கிறது. அவருக்கு பொறுத்தவரை கூட்டணியில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.


கூட்டணியில் இருந்து எம்பி, எம்எல்ஏக்களாக ஆக வேண்டும் என்பது தான் அவருடைய குறிக்கோளாக இருக்கிறது. பட்டியிலின மக்களுக்காக எல்லோரும் குரல் கொடுத்து கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணியில் திருமாவளவன் இருப்பதால் தான் கேள்வி கேட்கின்றனர். கூட்டணியில் இருக்கும் போது எஜமானர்களிடம் சொல்ல வேண்டும்.


வலிமையான கூட்டணி






கூட்டணிக்கு எந்த வித பாதிப்பும் கிடையாது. எங்கள் கூட்டணி ரொம்ப வலிமையான கூட்டணி. 2026ம் ஆண்டில் மிகப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க போகின்ற கூட்டணி. திமுகவின் கூட்டணி படுதோல்வி அடைய போகிறது. தேர்தல் நேரத்தில் உங்கள் எல்லோருக்கும் தெரியும். திமுகவில் இருந்து முக்கியமான ஆட்கள் வெளியே வருவதற்கு தயாராக இருக்கின்றனர்.

எங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. அது யார் என்று எப்படி சொல்ல முடியும். எங்களது கட்சி அலுவகத்தில் வந்து இணையும் போது உங்களை எல்லாம் வைத்து கொண்டு தான் இணைய வைப்போம். பொறுத்து இருங்கள், திமுகவில் இருந்து மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் எங்களுடன் வந்து இணைவார்கள். பொறுத்து இருந்து பாருங்கள்.

ரூ.6,626 கோடி



காங்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்த போது தமிழகத்திற்கு, 5 ஆண்டுகளில் ரயில் திட்டங்களுக்கு ரூ.871 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. ஆனால், பாஜ அரசு இந்தாண்டு மட்டும் ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ.30,000 கோடிக்கு மேல் ரயில்வேயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு; அவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் தான் ரெய்டுகள் நடைபெறுகின்றன. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Advertisement