மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்; மதுரையில் அதிர்ச்சி

10


மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே மகளை திருமணம் செய்த வாலிபரை காரில் மோதி மாமனார் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த பூதமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 21, தும்பை பட்டி ராகவி 24, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். ராகவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் வாகன விபத்தில் இறந்து விட்டார். கணவரை இழந்த ராகவியை அவரை விட வயது குறைந்த சதீஷ் காதலித்து திருமணம் செய்ததால் ராகவியின் பெற்றோர், உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .

வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்று விட்டதாக ராகவி மீது பெற்றோர் மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் அழைப்பின் பேரில் நேற்று இரு தரப்பினரும் விசாரணைக்கு வந்தனர். நேற்று நள்ளிரவு 11:30 மணி வரை விசாரணை தொடரவே இரு தரப்பினரையும் போலீசார் இன்று விசாரணைக்கு வருமாறு அனுப்பி வைத்தனர்.



சதீஷ்குமார் டூவீலரில் ராகவியை அழைத்துச் சென்றார். அய்யாபட்டி விலக்கு அருகே சென்றபோது ராகவியின் உறவினர்கள் பின்னால் காரில் சென்று டூவீலர் மீது மோதி தாக்கியதில் சதீஷ்குமார் இறந்தார். ராகவி மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement