4 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடு ரூ.10 லட்சம் கோடி: முதல்வர் ஸ்டாலின்

37


தர்மபுரி: தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கும் காரணத்தினால் தான், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்து இருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.


தர்மபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். தமிழகத்தில் முதன்முறையாக தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர் கடன் வழங்கப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பித்த அன்றே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பயிர்க்கடன் வரவு வைக்கப்படும். நேரடியாக கடன் பெறும் நடைமுறையை மாற்றி இணைய வழியில் பயிர்க்கடன் பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

சில விஷமிகள்...!



நாட்டில் உள்ள அனைத்து வளர்ச்சி திட்டங்களுக்கும் தமிழகம் தான் முன்னோடி. திராவிட மாடல் தான் இந்தியாவுக்கான திசைக்காட்டி. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் இருப்பதாக நானோ, நீங்களோ மட்டும் கூறவில்லை. மத்திய அரசின் புள்ளி விபரங்களே கூறுகின்றன. இதை பொறுத்து கொள்ள முடியாமல் ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள்.

அவதூறுகள்



எதிர்க்கட்சிகள் சொல்வதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. அது தான் அவர்கள் அரசியல். அவர்களை விடவும் ஒருவர் மலிவான அரசியல் செய்கிறார். யார் என்று உங்களுக்கு தெரியும். அவர் தான் மத்திய பாஜ அரசால் நியமிக்கப்பட்டு இருக்கும் நமது கவர்னர் ரவி. கவர்னர் மாளிகையில் இருக்கும் அவர் செய்கிற என்ன வேலை தெரியுமா?

ரூ.10 லட்சம் கோடி




திமுக ஆட்சி மீது அவதூறுகளை பரப்புகிறார். திமுக மீது அவதூறு பரப்புவார். சட்டங்களுக்கு ஒப்புதல் தரமாட்டார். இல்லாத திருக்குறளை அச்சிட்டு கொடுப்பார். தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கும் காரணத்தினால் தான், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை நாம் ஈர்த்து இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

புதிய அறிவிப்புகள்




தர்மபுரி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த புதிய திட்டங்கள் விபரம் பின்வருமாறு:

* அரூர் வருவாய் வட்டத்தில் 63 மலைக் கிராமங்கள் இணைக்கப்படும்.


* நல்லம்பள்ளியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.7.5 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.


* ஆட்டுகாரன்பட்டி - பென்னாகரம் வரை இருவழிச் சாலை 4 வழிச் சாலையாக மேம்படுத்தப்படும்.

* ரூ.11 கோடிகள் புளி வணிக மையம் அமைக்கப்படும்.

Advertisement