ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி!

1

புவனேஸ்வர்: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



பிஜு ஜனதாதள தலைவரும், ஒடிசா எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பவர் நவீன் பட்நாயக். 5 முறை ஒடிசாவின் முதல்வராக இருந்தவர்.


78 வயதான அவருக்கு ஜுன் 12ம் தேதி முதுகுதண்டுவட அறுவை சிகிச்சை மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை கோவையில் உள்ள பிரபல மருத்துவர் ராஜசேகரன் செய்து முடித்தார்.


அதன் பின்னர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். ஜூலை 7ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


இந் நிலையில் நவீன் பட்நாயக்கிற்கு இன்று (ஆக.17) திடீரென மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் புவனேஸ்வரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறி உள்ளதாவது;


நீர்ச்சத்து குறைபாடு காரணமாக நவீன் பட்நாயக் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கான மருந்துகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவரது உடல்நிலை உள்ளது. விரைவில் அவர் குணம் பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement