அமலாக்கத்துறைக்கு பதில் தேர்தல் ஆணையம்; மத்திய அரசு மீது தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

2

அவுரங்காபாத்:பீஹாரில் அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறை தோல்வியடைந்ததால், தற்போது தேர்தல் ஆணையத்தை அனுப்பியுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.


பீஹார் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பீஹாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையிலும், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இன்று யாத்திரையை துவங்கினார். இதில் பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்த நிலையில், அவுரங்கபாத்தில் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது; பீஹாரில் அமலாக்கத்துறையும், சிபிஐ, வருமான வரித்துறை தோல்வியடைந்ததால், தற்போது தேர்தல் ஆணையத்தை அனுப்பியுள்ளனர். சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் உங்களின் ஓட்டுகளை திருட முயல்கின்றனர். பாஜவின் இரட்டை இன்ஜின் அரசு, உங்களின் ஓட்டுகளை திருட முயற்சிக்கிறது. மிகப்பெரிய மோசடி நடைபெற்று வருகிறது. அவர்கள் உங்களின் ஓட்டுகளை நீக்கம் செய்துள்ளனர்.


உங்கள் ஓட்டை யாராலும் திருட முடியாது என்பதை உறுதி அளிக்கிறோம். பீஹார் வாக்காளர்களின் ஓட்டுகளை திருட யாருக்கும் தைரியம் இல்லை. குஜராத்தை சேர்ந்த 2 பேரால், பீஹார் ஓட்டுகளை அடையாள காண முடியுமா? பீஹார் மக்களை ஏமாற்றுவதை முதலில் நிறுத்துங்கள். எங்களுடன் மோதுவது ரொம்ப கடினம். ஒரு பீஹாரி நூறு பேருக்கு சமம், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement