'தி.மு.க., ஆட்சி மீது விவசாயிகளுக்கு அதிருப்தி'

கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ்(த.மா.கா.,) கட்சியின் நிறுவனர் மூப்பனார், 94வது பிறந்த தினத்தை முன்னிட்டு, விவசாயிகள் தின கருத்தரங்கம், கோவை அவிநாசி ரோடு சின்னியம்பாளையத்தில் உள்ள, திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு, விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மாநில அரசு, விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. விவசாயிகளுக்கு தி.மு.க., ஆட்சி மீது அதிருப்தியே உள்ளது. விவசாயிகள் இம்முறை ஆட்சி மாற்றத்துக்கு தயாராக உள்ளனர்.

தேர்தல் ஆணையம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள் விரும்பும் அரசை, ஏற்படுத்துவதற்கான ஒரு நடுநிலையான ஆணையம். அதை தொடர்ந்து குற்றம் சொல்லி, ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால், உண்மையாகி விடும் என, காங்., மற்றும் அதன் தலைவர்கள் செயல்படுத்த துவங்கியுள்ளனர்.

மத்திய அரசின் மீது கோபம் இருந்தால், அதை தேர்தல் ஆணையம் மீது காட்டுவது வழக்கமாகி விட்டது. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, எதிர்காலத்தில் இன்னும் விரிவாக்கப்படும் என, பழனிசாமி தெரிவித்துள்ளார். அ.தி.மு.க., பா.ஜ., இணைந்து கூட்டணி சம்பந்தமாக எடுக்கின்ற முடிவு, பிற கூட்டணி கட்சிகளுக்கு இறுதி முடிவாக இருக்கும்.

தூய்மை பணியாளர்களின் போராட்டம், நியாயமானது. மனிதாபிமானம் இல்லாமல் தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாக கட்டாயப்படுத்தி, வெளியே தள்ளுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement