சேதம்... சீரமைப்பு... 'ரிப்பீட்டு' திருவாலங்காடில் தொடரும் அவலம்

திருவாலங்காடு:பாகசாலை ஊராட்சியில் சுகாதார வளாகம் சேதமடைவதும், திருவாலங்காடு ஒன்றிய நிர்வாகம் சீரமைப்பதும் தொடர்கிறது.

திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலை ஊராட்சியில், 2010ம் ஆண்டு பெண்கள் சுகாதார வளாகம் கட்டடப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், நான்கு ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்தது.

கடந்த 2015 -- 16ம் ஆண்டு, ௧ லட்சம் ரூபாய் மதிப்பில் பாழடைந்த வளாகம் சீரமைக்கப்பட்டது. அதன்பின்னும், ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. குழாய்கள் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டன.

இதனால், கிராமத்தில் வசிக்கும் பெண்கள், பாகசாலை முருகன் கோவிலுக்கு வருவோர், மகளிர் சுய உதவிக்குழுவினர் கழிப்பறை இன்றி பாதிக்கப்படுவதாக, நம் நாளிதழில் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, 2023 - ---24ம் ஆண்டு பொது நிதியில் இருந்து, 1 லட்சத்து 53,௦௦௦ ரூபாய் மதிப்பில், மகளிர் சுகாதார வளாகம் ஆறு மாதத்திற்கு முன் சீரமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் மீண்டும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.

இதனால், பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பில் வளாகம் சீரமைத்தது, பூட்டி வைக்கவா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே, மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement