சிறுமிக்கு பாலியல் சீண்டல்: பப்ஸ் வியாபாரி கைது

கோவை:
கோவை தனியார் தோட்டத்தில், 13 வயது சிறுமி, தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார். சிறுமி, பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளார். இந்த தோட்டத்திலேயே, சிறுமியின் தாய் மற்றும் பாட்டி வேலை செய்து வருகின்றனர்.

இந்த தோட்டத்திற்கு, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், உக்கடம், மஜீத் காலனியை சேர்ந்த சபீர், 39 என்பவர், பப்ஸ் விற்க வந்து கொண்டிருந்தார். சபீருக்கும், சிறுமிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. சபீருக்கு திருமணமாகவில்லை.

சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது, பப்ஸ் விற்க சென்ற சபீர், சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறி, கையை பிடித்துள்ளார். பயந்த சிறுமி வீட்டிற்குள் சென்றுவிட்டார். சபீரும் அங்கிருந்து சென்று விட்டார்.

சிறுமி, தனது பாட்டியிடம் கூறியுள்ளார். நேற்றும் வழக்கம்போல, சபீர் பப்ஸ் விற்க, தோட்டத்திற்கு சென்றபோது, சிறுமியின் உறவினர்கள், சபீரை பிடித்து விசாரித்தனர். நடந்தது உண்மை என்பது தெரியவந்தது.

சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், பேரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, சபீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement