கொடுத்த அவகாசம் முடிந்தும் 27 பணிகள் நிலுவை; 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நகராட்சிகள் மெத்தனம்

1

சென்னை: நாடு முழுதும், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கான அவகாசம், கடந்த மார்ச் 31ல் முடிந்த நிலையில், தமிழகத்தில், 10 நகரங்களில், 27 திட்டப்பணிகள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.


நாடு முழுதும் நகர்ப்புற பகுதிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய
அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


அந்த வகையில், 100 நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை, மத்திய அரசு 2015ல் அறிவித்தது. இதன்படி, 8,063 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்காக, 1.64 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.



இதில், 95 சதவீதம் அதாவது, 1.53 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, 7,626 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.



தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் என, 100 நகரங்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு, 17,984 கோடி ரூபாய் மதிப்பிலான, 733 கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


அதில், 17,390 கோடி ரூபாய் மதிப்பிலான, 706 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மதுரை, கோவை நகரங்களில் மட்டும், அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. மற்ற நகரங்களில், 27 பணிகள் நிலுவையில் உள்ளன.


இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:






'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகளை, 2019 அல்லது 2023ல் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பெரும்பாலான திட்டங்களின் பணிகள் நிலுவையில் இருந்ததால், 2024 ஜூன் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.


எஞ்சிய பணிகளை முடிக்க, கூடுதல் அவகாசம் வேண்டும் என, கடந்த ஆண்டு பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தின. அதை ஏற்று, 2025 மார்ச 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது.



அதன்பின், அவகாசம் வழங்கப்படவில்லை. ஒப்புதல் அளிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான நிதியும் விடுவிக்கப்பட்ட நிலையில், நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.



அவகாசம் முடிந்த நிலையில், தமிழகத்தில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், 10 நகரங்களில், 594 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 திட்டப்பணிகள் நிலுவையில் உள்ளன. இவற்றை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் முடியாத நிலையில், மத்திய அரசிடம் இருந்து புதிய திட்டங்களுக்கு நிதி பெறுவதில் சிக்கல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement