அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனமாக்குது நெடுஞ்சாலை ஆணையம்

சென்னை,: தேசிய நெடுஞ் சாலைகள் ஆணையத்தின் அவசர கட்டுப்பாட்டு மையத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வாயிலாக, நாடு முழுதும், 1.32 லட்சம் கி.மீ., சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூல் செய்வதற்கு, 800க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்கள், விபத்துக்களில் சிக்கும் போதும், இயற்கை சீற்றம் உள்ளிட்ட நேரங்களிலும், எரிபொருள் தீர்ந்து போகுதல், இயந்திர கோளாறு, பஞ்சர் போன்ற பாதிப்பு ஏற்படும் நேரங்களிலும், சுங்கச்சாவடிகளில் இருந்து உதவிகள் வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளன.

அதாவது, 1033 என்ற 24 மணி நேர அவசர தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறலாம். 'பாஸ்டேக்' தொடர்பான பிரச்னைகளுக்கும் தீர்வு வழங்கப்படுகிறது.

ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் இதற்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. அவசர தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளும் போது, உதவிகள் பெற காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

பல சுங்கச்சாவடிகளில், ஆம்புலன்ஸ், மீட்பு வாகனங்கள், முதலுதவி சிகிச்சை மற்றும் மீட்பு குழுவினர் இல்லை. இதனால், சுங்கக் கட்டணம் செலுத்தி பயணிக்கும் வாகன ஓட்டிகள், அவசர காலங்களில் உதவி பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அவசர கால தொலைபேசி மையத்தை நவீனப்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

இதற்காக, அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை நிர்வகிக்க, புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய பணிகள் துவக்கப்பட்டுள்ளன. முன்னர் டில்லியில் மட்டுமே இயங்கிய, அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை, பல்வேறு மாநிலங்களிலும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான நிறுவனத்தை தேர்வு செய்யும் பணி, டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் அடுத்த மாதம், 12ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement