திண்டிவனம் - கிருஷ்ணகிரி; திண்டுக்கல் - நத்தம் நான்கு வழி சாலையாக மாற்ற நடவடிக்கை

சென்னை : திண்டுக்கல் - நத்தம் மற்றும் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலைகளை, நான்கு வழிச்சாலைகளாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் துவக்கி உள்ளது.

திருவண்ணாமலை, மேல்மருவத்துார், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணியரின் வாகனங்கள், திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிகம் செல்கின்றன.

இச்சாலை, 183 கி.மீ., நீளம் உடையது. இந்தச் சாலையை இரு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி, 2012ல் துவக்கப்பட்டு, நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த ஆண்டு முடிந்தது.

இதற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 624 கோடி ரூபாய் செலவிட்டது. இந்த சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய, நங்கிலிகொண்டான், கரியமங்கலம், நாகம்பட்டி ஆகிய இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இரு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திருவண்ணாமலை மற்றும் மேல்மருவத்துார் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, இந்த சாலையை நான்கு வழியாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முன் வந்துள்ளது.

இதேபோல, திண்டுக்கல் - நத்தம் இடையிலான 34 கி.மீ., சாலையும், 270 கோடி ரூபாய் செலவில் இரு வழியாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சாலையிலும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இரண்டு சாலைகளுக்கும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிறுவனம், அடுத்த மாதம் ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது. திட்ட அறிக்கை தயாரிப்புக்கு பின், சாலைகள் விரிவாக்கத்திற்கு எவ்வளவு நிதி, நிலங்கள் தேவைப்படும் என்ற விபரம் தெரியவரும்.

Advertisement