குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  குடிநீர் எடுக்க தடை 

சிவகங்கை : நிலநீர் எடுப்பு தடையின்மை சான்று இன்றி கொல்லங்குடி அருகே அய்யனார்குளத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவது குறித்து செய்தி வெளியானதன், எதிரொலியாக இந் நிலையத்திற்கு காளையார் கோவில் தாசில்தார் முபாரக் உசேன் தடை விதித்துள்ளார்.

சிவகங்கையில் கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் தென்னரசு தலைமையிலான விவசாயிகள் காளையார்கோவில் தாலுகா, முத்துார் வாணியங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார்குளம் கிராமத்தில் இயங்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் எடுத்து அருகில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தனர்.

அய்யனார்குளத்தில் இயங்கிய குடிநீர் சுத்தி கரிப்பு நிலையத்தில் காரைக்குடி நீர்வளத்துறை (நிலநீர் கோட்டம்) செயற்பொறியாளர் கார்த்தி கேயன் தலைமையில் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், சென்னை மாநில நில மற்றும் நீர்பரப்பு ஆதார விபர குறிப்பு மைய, தலைமை பொறியாளரிடம் நிலத்தடி நீரை எடுப்பதற்கான தடையின்மை சான்று பெறவில்லை என்பதை கண்டறிந்து, கலெக்டருக்கு அறிக்கை சமர்பித்தனர்.

இதையடுத்து காளையார்கோவில் தாசில்தார் முபாரக் உசேன், உரிய அனுமதியின்றி நிலத்தடி நீரை எடுத்து, குடிநீர் வினியோகம் செய்ய தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisement