சேதமான கட்டடங்களால் மகளிர் சுயஉதவிக்குழுவினர் திண்டாட்டம்; கைவினை பொருட்கள் பயிற்சி அளிப்பதில் சிக்கல்

கிராமப்புற பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசு மகளிர் சுய உதவி குழு திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் மூலம் ஊராட்சிகள் தோறும் பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.
மகளிர் ஒன்று கூடி சங்கமாக சேர்ந்து நிதி திரட்டி வங்கிகளில் கணக்கு துவங்கி பராமரித்து வருகின்றனர்.கடந்த காலங்களில் குறிப்பிட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவக்கிய மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கி வருகிறது.
இதன்படி ஊராட்சிகள் தோறும் உருவான மகளிர் சுய உதவி குழுக்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதற்காக மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கட்டடங்கள் கட்டப்பட்டது.இந்தக் கட்டடங்களில் வைத்து மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தையல் பயிற்சி, கூடை முடைதல், சலவைக்கான சோப்பு தயாரித்தல்,வீட்டு பராமரிப்பிற்கான பினாயில் தயாரிப்பு, சாம்பிராணி மற்றும் ஊதுபத்தி சூடம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியை பெற்ற மகளிர் குழுக்கள் குழுவாக சேர்ந்தும் தனித்தனியாக வீடுகளிலும் பொருட்களை உற்பத்தி செய்து அவற்றை அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலமும் தாங்களாகவும் மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டி வந்தனர்.
இதற்கு ஊராட்சிகள் தோறும் கட்டப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழு கட்டடங்கள் மகளிருக்கு பேரூதவியாக அமைந்திருந்தது.காலப்போக்கில் தற்பொழுது ஊராட்சிகள் தோறும் மகளிர் சுய உதவி குழு கட்டடங்கள் பராமரிப்பு இன்றி கூரை இடிந்து விழுந்தும் மின் இணைப்பு இன்றியும் பரிதாபமான நிலையில் உள்ளன.
பல ஊராட்சிகளில் மகளிர் சுய உதவி கட்டடங்கள் புதர் மண்டிய நிலையில் காணப்படுகிறது. தற்போது மத்திய மாநில அரசுகள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பாலில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்களான நெய், வெண்ணை, பாலாடை, ஐஸ்கீரிம் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிப்பதற்காக தனியார் கல்லுாரிகளை நாடி பயிற்சி அளிக்க வேண்டிய நிலை உள்ளது.இது போன்ற பயிற்சிகள் பெறுவதற்காக மகளிர்கள் நீண்ட துரரம் பயணம் செய்ய வேண்டிய நிலையில் பலர் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகின்றனர்.
போக்குவரத்து செலவு இன்றி உள்ளூரிலேயே திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவதற்கு மகளிர் சுய உதவி குழு கட்டடங்கள் அவசியம் தேவை. மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவற்றை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டடங்களை கட்டித் தர வேண்டும் என மகளிர் குழுக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
எஸ்.இ.ஆர்.சி. ஆய்வகங்களில் மத்திய மின் துறை செயலர் ஆய்வு
-
ககன்யான் திட்டத்திற்கு உங்கள் அனுபவம் மதிப்புமிக்கது; சுக்லா உடன் பேசிய வீடியோ வெளியிட்டார் மோடி
-
திருமாவுடன் தே.மு.தி.க., சுதீஷ் சந்திப்பு தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரமா?
-
முடங்கியது ஏர்டெல்: பயனர்கள் தவிப்பு
-
பயன்படுத்தாத 4,300 ஏக்கர் நிலம்: வீட்டுவசதி வாரியம் விடுவிப்பு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன் ரூ.73,380!