அணை பகுதியில் குளித்த இரு மாணவியர் உயிரிழப்பு

ஊத்தங்கரை: பாம்பாறு அணை பகுதி நீரில் குளித்த மாணவியர் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கீழ்மத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அகிலா. இவரது வீட்டில் நேற்று முன்தினம், ஆடி கிருத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொள்ள, உள்ளூர் மற்றும் சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த உறவினர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.

இவர்களில் ஐந்து பேர், கீழ்மத்துார் அருகே செட்டியார் வட்டம், பாம்பாறு அணை பகுதியில் குளிக்க, நேற்று காலை, 11:30 மணிக்கு சென்றனர்.

இதில், சேலம், செவ்வாய்பேட்டையை சேர்ந்த கல்லுாரி மாணவி நீலாஸ்ரீ, 17, கீழ்மத்துாரை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி சாருமேத்ரா, 12, ஆகியோர், அணை நீரில் இறங்கி விளையாடிய போது, ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சிங்காரப்பேட்டை போலீசார் உடலை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement