அவசர கால கடன் உத்தரவாத திட்டம்; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

திருப்பூர்: அமெரிக்காவுடனா பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை தக்கவைக்க உதவியாக, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்காவில் இறக்குமதியாகும், இந்திய பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளதால், நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கானஆயத்த ஆடை உட்பட, ஒட்டுமொத்தஏற்றுமதி வர்த்தகமும் மந்தமாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்கு பிறகு, சீனாவுக்கான ஆர்டர்களும், வங்கதேசத்தின் உள்நாட்டு குழப்பத்தால், அந்நாட்டுக்கான அமெரிக்க ஆர்டர்களும் இந்தியாவை நோக்கி திரும்பியது.

பசுமை சார் உற்பத்தி சாதனைகளுக்கு, அமெரிக்காவில் அதிகபட்ச வரவேற்பு கிடைத்தது.

வியட்நாம் முதல் தேர்வு தற்போதைய சூழலிலும் கூட, இந்தியாவுடனான வர்த்தக உறவை கைவிட, அமெரிக்க வர்த்தகர்கள் தயாராக இல்லை. இருப்பினும், இந்தியாவுக்கான வரி நிர்ணயம் இறுதியாகும் வரை, தற்காலிகமாக, பிற நாடுகளுடன் வர்த்தக விசாரணையை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் துவக்கியுள்ளனர். வங்கதேசத்தில் உள்நாட்டு அரசியல் சூழல் ஸ்திரமில்லாத காரணத்தால், வியட்நாம் முதல் தேர்வாக மாறியிருக்கிறது.

ஏற்றுமதியாளர்களின் திட்டம் வரி விதிப்பால் ஏற்படும் கூடுதல் செலவுகளை, பகிர்ந்து கொள்வது தொடர்பாக, அமெரிக்க வர்த்தகர்கள் - பின்ன லாடை ஏற்றுமதியாளர்கள் இடையே பேச்சுவார்த்தைகள் துவங்கியுள்ளன. ''அமெரிக்காவுடனான வர்த்தகம் முக்கியமானது; ஒருமுறை கை நழுவினால் மீண்டும் கைப்பற்றுவது மிகவும் சிரமமானது. சில மாதங்களுக்கு நஷ்டமில்லாமல் ஆர்டர்களை முடித்து கொடுத்தால் போதும்'' என்பது ஏற்றுமதியாளர்களின் திட்டம்.

டிரம்ப் பேச்சால் நம்பிக்கை திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

வட்டி சமன்படுத்தும் திட்டத்துக்கு, 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 'பேக்கிங் கிரெடிட்' மீதான வட்டி மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அவசரகால கடன் உத்தரவாத திட்டம் மூலம், 2000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கொரோனா காலத்தில் வழங்கியது போல் உதவ வேண்டும். வங்கிகள் மூலம் தேவையான கடன் உதவி திட்டங்களையும் வழங்க வேண்டும். ஏற்றுமதி ஆடைகளுக்கான விலை போட்டியை சமாளிக்க, ஏற்றுமதி இன்சூரன்ஸ் திட்டம் வாயிலாக உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வரி நிர்ணயத்தில் சுமூக தீர்வு ஏற்படும் வரை, மத்திய அரசு, அவசரகால உதவியை வழங்கினால் மட்டுமே, அமெரிக்கா ஏற்றுமதி வர்த்தகத்தை தக்கவைக்க முடியும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட இரண்டாம் நிலை வரி நிறுத்திவைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். இது, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement