ககன்யான் திட்டத்திற்கு உங்கள் அனுபவம் மதிப்புமிக்கது; சுக்லா உடன் பேசிய வீடியோ வெளியிட்டார் மோடி


புதுடில்லி: ககன்யான் திட்டத்திற்கு உங்கள் அனுபவம் மதிப்புமிக்கது என விண்வெளி வீரர் சுக்லா உடன் கலந்துரையாடிய போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


சர்வதேச விண்வெளி நிலையத்தில் காலடி எடுத்து வைத்த முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற வரலாற்றை படைத்த குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பேசிய வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார்.


சுக்லாவுடனான உரையாடலின் போது, பிரதமர் நரேந்திர மோடி, "விண்வெளி நிலையம் மற்றும் ககன்யான் திட்டம். இவை எங்கள் பெரிய பணிகள். உங்கள் அனுபவம் அதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

அந்த உரையாடலின் போது, ககன்யான் உட்பட இந்தியாவின் எதிர்கால பயணங்களுக்கு உதவ, தனது கற்றல், பயிற்சி மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருத்தல் ஆகியவற்றை ஆவணப்படுத்துமாறு சுக்லாவிடம் மோடி கேட்டுக் கொண்டார். இது குறித்து சுக்லா கூறியதாவது:


பிரதமர் மோடி எனக்குக் கொடுத்த வீட்டுப்பாடம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் அதை மிகச் சிறப்பாக முடித்தேன். திரும்பி வந்து உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.


அந்த அறிவு அனைத்தும் நமது சொந்த ககன்யான் பணிக்கு மிகவும் பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு சுக்லா கூறியுள்ளார்.

Advertisement