எஸ்.இ.ஆர்.சி. ஆய்வகங்களில் மத்திய மின் துறை செயலர் ஆய்வு

சென்னை: கடல் காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் நிலையங்களின் கட்டுமானங்களில், புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவது தொடர்பாக, மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை செயலர் சந்தோஷ் குமார் சாரங்கி, சென்னையில் உள்ள மத்திய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய ஆய்வகங்களை பார்வையிட்டு, உயரதிகாரிகளுடன் நேற்று பேச்சு நடத்தினார்.

மத்திய அரசின் சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் கீழ், எஸ்.இ.ஆர்.சி., அதாவது மத்திய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் மற்றும் ஆய்வகங்கள், சென்னை தரமணியில் உள்ளன.

இந்நிறுவனம், மின்சாரம் எடுத்து செல்லும் அதிக திறன் உடைய மின் கோபுரம் சாய்ந்து விழும்போது, அதற்கு மாற்றாக அவசர காலத்திற்கு பயன்படுத்தும், 'எமர்ஜென்சி ரீடிரைவல் சிஸ்டம்' கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதேபோல், கட்டுமானங்களில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை செயலர் சந்தோஷ்குமார் சாரங்கி, சி.எஸ்.ஐ.ஆர்., இயக்குனர் கலைச்செல்வி ஆகியோர், தரமணியில் உள்ள எஸ்.இ.ஆர்.சி., ஆய்வகங்களை நேற்று பார்வையிட்டனர்.

அப்போது, கடலில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் கட்டுமானம், சூரியசக்தி மின் நிலையங்களை, நீர் நிலைகளில் மேல் அமைக்கும் கட்டுமானம் உள்ளிட்டவை தொடர்பாக, எஸ்.இ.ஆர்.சி., இயக்குனர் ஆனந்தவள்ளி உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.

இதன் வாயிலாக, எஸ்.இ.ஆர்.சி., தொழில்நுட்பங்களை பயன் படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

Advertisement