ஸ்பாட்டுக்கு போகாமல் ஏஐ போட்டோவில் பிரச்னைக்கு தீர்வு: அம்பலமானது சென்னை மாநகராட்சியின் குட்டு

7

சென்னை: போட்டோவுடன் அளிக்கப்பட்ட புகாருக்கு தீர்வு காணாமல், ஏஐ மூலம் மோசடியாக படத்தை மாற்றி அமைத்து அப்பிரச்னையை சரி செய்ததாக சென்னை மாநகராட்சி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு;


சென்னையில் உள்ளது சுண்ணாம்பு கொளத்தூர். பெரும்பான்மையான மக்கள் அறிந்த இந்த பகுதியில் திறந்தவெளியில் மின்சார கேபிள்கள் தொங்கி வருகின்றன. இதை கண்ட பள்ளிக்கரணையில் வசிக்கும் கண்ணதாசன் என்பவர், சம்பந்தப்பட்ட இடத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மின்சார கேபிள்கள் இருக்கின்றன. அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அவர் சென்னை மாநகராட்சியின் எக்ஸ்தள பக்கத்தில் புகார் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.


பதிவில் திறந்த வெளியில் மின்கேபிள்கள் தொங்குவதால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்களுக்கு ஆபத்து நேரக்கூடும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். புகாரை கண்ட மாநகராட்சி அதிகாரிகள் அதை சரி செய்துவிட்டதாகவும், புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் போட்டோவுடன் பதில் அளித்து இருந்தனர். இந்த போட்டோவை சென்னை மாநகராட்சியின் உதவி நிர்வாக பொறியாளர் வெளியிட்டு உள்ளார்.


இப்போது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள போட்டோ தற்போது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, மாநகராட்சி பதிவேற்றி உள்ள போட்டோவில் இருப்பது போல் சம்பந்தப்பட்ட சுண்ணாம்பு கொளத்தூர் பகுதிக்கு, அந்த குறிப்பிட்ட இடத்திற்கு போகாமல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் படத்தில் திருத்தங்கள் செய்து, புகாருக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தரப்பட்ட புகாரில் உண்மை இருக்கிறதா? ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் கேபிள்கள் தொங்குகிறதா? என்று ஆய்வு நடத்தவில்லை. மாறாக, ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் பயன்படுததி படத்திலே நுகர்வோர் சொன்ன இடத்தில் உள்ள குறைகளை உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே போட்டோவிலேயே சரி செய்து இருக்கின்றனர்.


புகார்தாரர் கண்ணதாசன் அனுப்பிய போட்டோவில் உள்ள வாகனங்களை மட்டும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் அழித்துவிட்டு, மின்சார கேபிள்களை அப்படியே விட்டிருப்பதன் மூலம் மாநகராட்சியின் இந்த பித்தலாட்டம் அம்பலப்பட்டு இருக்கிறது.


சென்னை மாநகராட்சி பரந்து விரிந்தது. இங்குள்ள மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு மத்தியில் தினசரி எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது என்பது அவ்வளவு சுலபமல்ல.


ஆனால் உட்கார்ந்த இடத்தில் இருந்தே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிரதான சாலையில் உள்ள பிரச்னையை ஒரு போட்டோவில் சரிப்படுத்திவிட்டதாக காட்டி அதையும் வெளியிட்டு இருப்பது எப்படி சரியாகும், பொறுப்பை அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர் என்பதற்கு இதைவிட சரியான உதாரணம் வேறு என்ன இருக்க முடியும் என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

Advertisement